Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:27

[1] அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னதாவது:

[2] “இந்த வார்த்தைகளுக்கு யாராவது பதில்சொல்ல வேண்டாமா? அதிகப் பேச்சினால் ஒருவன் நீதிமானாக முடியுமா?

[3] உன் வீண்பேச்சு மனிதர்களின் வாயை அடக்குமோ? நீ கேலி செய்யும்போது யாரும் உன்னைக் கண்டிக்கமாட்டார்களோ?

[4] நீ இறைவனிடம், ‘என்னுடைய நம்பிக்கைகள் மாசற்றவை; நான் உமது பார்வையில் தூய்மையானவன்’ என்று சொல்கிறாய்.

[5] இறைவன் உன்னோடு பேசினால் நலமாயிருக்கும், அவர் உனக்கு விரோதமாக,

[6] ஞானத்தின் மறைபொருட்களை உனக்கு வெளிப்படுத்தினால் நல்லது; ஏனெனில் மெய்ஞானம் இருபக்கங்களைக் கொண்டது. இறைவன் உனது பாவங்களில் சிலவற்றைக்கூட மறந்துவிட்டார் என்பதை அறிந்துகொள்.

[7] “இறைவனின் மறைபொருட்களின் ஆழத்தை உன்னால் அறியமுடியுமோ? எல்லாம் வல்லவரின் எல்லைகளை ஆராய உன்னால் முடியுமோ?

[8] அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்?

[9] அவைகளின் அளவு பூமியைவிட நீளமானவை; கடலைவிட அகலமானவை.

[10] “அவரே வந்து உன்னைச் சிறையிலடைத்து, நீதிமன்றத்தைக் கூட்டினால், யாரால் அவரை எதிர்த்து நிற்கமுடியும்?

[11] ஏமாற்றுகிற மனிதரை நிச்சயமாய் அவர் அறிவார்; தீமையைக் காணும்போது அவர் கவனியாமல் இருப்பாரோ?

[12] ஒரு காட்டுக் கழுதைக்குட்டி எப்படி மனிதனாகப் பிறக்க முடியாதோ, அப்படியே பகுத்தறிவில்லாத ஒருவனும் ஞானமுள்ளவனாகமாட்டான்.

[13] “அப்படியிருந்தும் உன் உள்ளத்தில் அவரிடம் பயபக்தியாயிருந்து உன் கைகளை அவரிடத்திற்கு நீட்டி,

[14] உன் கையிலுள்ள பாவத்தை விலக்கிவிட்டு, உன் வீட்டில் தீமை குடிகொள்ளாமல் தடைசெய்தால்,

[15] நீ உன் முகத்தை வெட்கமின்றி உயர்த்தி, பயமின்றி உறுதியாய் நிற்பாய்.

[16] நீ உன் தொல்லையை மறந்துவிடுவாய், கடந்துபோன தண்ணீரைப்போல அது உன் ஞாபகத்தில் இருக்கும்.

[17] அப்பொழுது வாழ்க்கை நண்பகலைவிட வெளிச்சமாயிருக்கும், இருள் காலையைப்போல மாறும்.

[18] நம்பிக்கை இருப்பதினால் உறுதிகொள்வீர், சுற்றிலும் பார்த்து, பாதுகாப்பாக இளைப்பாறுவாய்.

[19] யாரும் உன்னைப் பயமுறுத்தாமல் நீ படுத்திருப்பாய்; அநேகர் உன் தயவை தேடிவருவார்கள்.

[20] ஆனால் கொடியவர்களின் கண்கள் மங்கிப்போகும், அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்களின் நம்பிக்கை மரணமே.”

யோபுவின் சரித்திரம் — Chapters