[1] யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:
[2] “எனக்கு நீதியை மறுத்து, வாழ்வைக் கசப்பாக்கின எல்லாம் வல்ல இறைவன் வாழ்வது நிச்சயம்போலவே,
[3] எனக்குள் என் உயிரும், என் மூக்கில் இறைவனின் சுவாசமும் இருக்கும்வரை,
[4] என் உதடுகள் கொடுமையானதைப் பேசாது, என் நாவு வஞ்சகமானவற்றைச் சொல்லாது.
[5] நீங்கள் சொல்வது சரி என நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டேன்; நான் சாகும்வரை என் உத்தமத்தை மறுக்கவுமாட்டேன்.
[6] என் நேர்மையை நான் காத்துக்கொள்வேன், அதை நான் ஒருபோதும் விடமாட்டேன்; நான் உயிரோடிருக்குமட்டும் என் மனசாட்சி என்னைக் கடிந்துகொள்ளாது.
[7] “என் பகைவர் கொடியவர்களைப்போல் இருக்கட்டும், என் விரோதி அநீதியுள்ளவர்களைப்போல் இருக்கட்டும்.
[8] இறைவனை மறுதலிக்கிறவன் வெட்டுண்டுபோய், இறைவன் அவனுடைய உயிரை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கை என்ன?
[9] அவனுக்குத் துன்பம் வரும்போது இறைவன் அவனுடைய கதறலைக் கேட்பாரோ?
[10] எல்லாம் வல்லவரில் அவன் மகிழ்ச்சியடைவானோ? எல்லா நேரங்களிலும் அவன் இறைவனைக் கூப்பிடுவானோ?
[11] “இறைவனின் வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்; எல்லாம் வல்லவரின் வழிகளை நான் மறைக்கமாட்டேன்.
[12] இவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தும் ஏன் இந்த வீண்பேச்சு?
[13] “கொடியவனுக்கு இறைவனிடத்திலிருந்து கிடைக்கும் பங்கும், தீயவன் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து பெறும் உரிமைச்சொத்தும் இதுவே:
[14] அவனுக்கு பிள்ளைகள் அநேகர் இருப்பார்கள், ஆனால் அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்; அவனுடைய சந்ததியினருக்கு ஒருபோதும் போதியளவு உணவு கிடைக்காது.
[15] அவனுக்கு மீதியானவர்கள் கொள்ளைநோய்க்குப் பலியாகும்போது, அவர்களுடைய விதவைகள் அழமாட்டார்கள்.
[16] அவன் வெள்ளியைப் தூசியைப்போலவும், உடைகளைக் களிமண் குவியலைப் போலவும் குவித்து வைத்தாலும்,
[17] அவன் குவித்து வைத்ததை நேர்மையானவர்கள் உடுத்துவார்கள், குற்றமற்றவர்கள் அவனுடைய வெள்ளியைப் பகிர்ந்துகொள்வார்கள்.
[18] அவன் தன்னுடைய வீட்டை சிலந்தி பூச்சியின் கூட்டைப்போலவும், காவற்காரன் கட்டிய சிறுகுடிசையைப்போலவும் கட்டுகிறான்.
[19] அவன் செல்வந்தனாக படுக்கைக்குப் போகிறான், ஆனால் தொடர்ந்து அப்படியிரான்; அவன் தன் கண்களைத் திறக்கும்போது எல்லாமே போய்விடுகின்றன.
[20] பயங்கரங்கள் வெள்ளம்போல் அவனை மேற்கொள்கின்றன; இரவில் பெரும்புயல் அவனை அள்ளிக்கொண்டுபோகிறது.
[21] கொண்டல் காற்று அவனை அடித்து செல்கிறது, அவன் காணாமல் போகிறான்; அவன் இருப்பிடத்திலிருந்து அவனை வாரிக்கொண்டுபோகிறது.
[22] அது இரக்கமின்றி அவனை விரட்டும்; இறைவனுடைய கைக்குத் தப்பியோட பார்ப்பார்கள்.
[23] மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து, அவனை அவனுடைய இடத்தைவிட்டு விரட்டிவிடுவார்கள்.”