Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:20

[1] அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது:

[2] “நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறபடியால், என் சிந்தனை மறுமொழிக்கூற என்னைத் தூண்டுகிறது.

[3] என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்; என் உள்ளுணர்வு என்னைப் பதிலளிக்கும்படி ஏவுகின்றது.

[4] “மனிதன் பூமியில் தோன்றிய பூர்வகாலத்திலிருந்து, எவ்வாறு இருந்தது என்பது உனக்கு நிச்சயமாய்த் தெரியும்:

[5] கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம், இறைவனை மறுதலிக்கிறவனின் மகிழ்ச்சி நொடிப்பொழுது.

[6] இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும், அவனுடைய தலை மேகங்களைத் தொட்டாலும்,

[7] அவன் உரம் போல அழிந்தே போவான்; அவனை முன்பு கண்டவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள்.

[8] ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் மறைந்துபோகிறான்.

[9] அவனைப் பார்த்த கண் மீண்டும் அவனைப் பார்க்காது; அவனுடைய இருப்பிடமும் இனி அவனைக் காணாது.

[10] அவனுடைய பிள்ளைகள் ஏழைகளின் தயவை நாடுவார்கள்; அவனுடைய கைகள் அவனுடைய செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.

[11] அவனுடைய எலும்புகளில் நிரம்பியிருக்கிற இளமையின் வலிமை, அவனுடன் தூசியில் கிடக்கும்.

[12] “தீமை இறைவனற்றவனின் வாயில் இனிமையாயிருந்தாலும், அவன் அதைத் தன் நாவின்கீழ் மறைத்து வைக்கிறான்.

[13] அதை விட்டுவிட மனமில்லாமல் தன் வாயில் வைத்திருக்கிறான்.

[14] ஆனாலும் அவனுடைய உணவு அவன் வயிற்றுக்குள் புளிப்பாக மாறி, அவனுக்குள் பாம்பின் விஷம் போலாகிவிடும்.

[15] அவன் தான் விழுங்கிய செல்வத்தை வெளியே துப்பிவிடுவான்; இறைவன் அவனுடைய வயிற்றிலிருந்து அதை வெளியேறும்படி செய்வார்.

[16] அவன் பாம்புகளிலிருந்து நஞ்சை உறிஞ்சுவான்; விரியன் பாம்பின் நச்சு அவனைக் கொன்றுவிடும்.

[17] தேனும் வெண்ணெயும் ஓடும் ஆறுகளிலும், நீரோடைகளிலும் அவன் இன்பம் காணமாட்டான்.

[18] அவன் தான் கஷ்டப்பட்டு உழைத்ததை உண்ணாமலே திருப்பிக் கொடுக்கவேண்டும்; அவன் தன் வியாபாரத்தின் இலாபத்தையும் அனுபவிப்பதில்லை.

[19] அவன் ஏழைகளை ஒடுக்கி, அநாதைகளாக்கினான்; தான் கட்டாத வீடுகளைக் கைப்பற்றிக்கொண்டான்.

[20] “நிச்சயமாகவே இறைவனற்றவனுடைய ஆசைக்கு அளவேயில்லை; ஆதலால், தான் இச்சித்த பொக்கிஷங்களில் எதுவும் மீந்துவதில்லை.

[21] அவன் விழுங்குவதற்கும் ஒன்றும் மீதமில்லை; அவனுடைய செழிப்பும் நிலைக்காது.

[22] அவனுடைய நிறைவின் மத்தியில் துயரம் அவனை மேற்கொள்ளும்; அவலத்தின் கொடுமை முழுமையாய் அவன்மேல் வரும்.

[23] அவன் வயிறு நிரம்பும்போது, இறைவன் தமது கடுங்கோபத்தை அவன்மேல் வரப்பண்ணி, அடிமேல் அடியாக அவனை வாதிப்பார்.

[24] அவன் இரும்பு ஆயுதத்திற்குத் தப்பி ஓடினாலும், வெண்கல முனையுள்ள அம்பு அவனைக் குத்துகிறது.

[25] அவன் அதைத் தன் முதுகிலிருந்தும், அதின் மினுங்கும் நுனியைத் தன் ஈரலிலிருந்தும் இழுத்தெடுக்கிறான். பயங்கரங்கள் அவனை ஆட்கொள்கின்றன;

[26] அவனுடைய பொக்கிஷங்கள் காரிருளில் கிடக்கும். அணையாத நெருப்பு அவனைச் சுட்டெரித்து, அவனுடைய கூடாரத்தில் மீதியாயிருப்பதையும் விழுங்கிப்போடும்.

[27] வானங்கள் அவன் குற்றங்களை வெளிப்படுத்தும்; பூமி அவனுக்கெதிராக எழும்பும்.

[28] அவனுடைய வீட்டின் செல்வம் போய்விடும்; இறைவனுடைய கோபத்தின் நாளிலே, அதை வெள்ளம் அள்ளிக்கொண்டுபோகும்.

[29] கொடியவர்களுக்கு இறைவன் நியமித்த பலன் இதுவே; இறைவனால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பங்கும் இதுவே.”

யோபுவின் சரித்திரம் — Chapters