[1] “இவை எல்லாவற்றையும் என் கண் கண்டிருக்கின்றது, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
[2] உங்களுக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்கும் தெரியும்; நான் உங்களைவிட தாழ்ந்தவனல்ல.
[3] ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு பேசவும், இறைவனோடு என் வழக்கை வாதாடவும் விரும்புகிறேன்.
[4] எப்படியும் நீங்கள் என்னைப் பொய்களால் மழுப்புகிறீர்கள்; நீங்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாத மருத்துவர்கள்.
[5] நீங்கள் பேசாமல் மட்டும் இருப்பீர்களானால், அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
[6] இப்பொழுது என் விவாதத்தைக் கேளுங்கள்; என் உதடுகளின் முறையிடுதலுக்குச் செவிகொடுங்கள்.
[7] இறைவனின் சார்பாக கொடுமையாய்ப் பேசுவீர்களோ? அவருக்காக நீங்கள் வஞ்சகமாய்ப் பேசுவீர்களோ?
[8] அவருக்கு நீங்கள் பட்சபாதம் காட்டுவீர்களோ? இறைவனுக்காக வழக்கை வாதாடுவீர்களோ?
[9] அவர் உங்களைச் சோதித்தால், உங்களுக்கு நலமாகுமோ? மனிதரை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்ற முடியமோ?
[10] நீங்கள் இரகசியமாய் பட்சபாதம் காட்டினாலும், அவர் நிச்சயமாக உங்களைக் கண்டிப்பார்.
[11] அவருடைய மகத்துவம் உங்களுக்குத் திகிலூட்டாதோ? அவருடைய பயங்கரம் உங்கள்மேல் வராதோ?
[12] உங்கள் கொள்கைகள் சாம்பலை ஒத்த பழமொழிகள்; உங்கள் எதிர்வாதங்களும் களிமண்ணுக்கு ஒப்பானது.
[13] “பேசாமல் இருங்கள், என்னைப் பேசவிடுங்கள்; அதின்பின் எனக்கு வருவது வரட்டும்.
[14] ஏன் நான் என்னையே இடரில் மாட்டி, உயிரைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
[15] அவர் என்னைக் கொன்றாலும், நான் இன்னும் அவரிலேயே நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவர்முன் குற்றமற்றவை என வாதாடுவேன்.
[16] இது என் விடுதலைக்குக் காரணமாகும், இறைவனற்றவன் அவர்முன் சேரமாட்டான்.
[17] நான் பேசப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்; நான் சொல்வதை உங்கள் செவி ஏற்றுக்கொள்ளட்டும்.
[18] எனது வழக்கு ஆயத்தம், நான் குற்றமற்றவனென நிரூபிக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரியும்.
[19] எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர யாரால் முடியும்? அப்படியானால், நான் மவுனமாயிருந்தே சாவேன்.
[20] “இறைவனே, இந்த இரண்டு காரியங்களை மட்டும் கொடுத்தருளும், அப்பொழுது நான் உம்மிடமிருந்து மறைந்து கொள்ளமாட்டேன்:
[21] உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும், உமது பயங்கரங்களால் என்னைத் திகிலடையச் செய்யாதீர்.
[22] அதின்பின் என்னைக் கூப்பிடும்; நான் பதில் சொல்வேன், அல்லது என்னைப் பேசவிட்டு நீர் பதில் கொடும்.
[23] அநேக பிழைகளையும் பாவங்களையும் நான் செய்திருக்கிறேன்? என் குற்றத்தையும், என் பாவத்தையும் எனக்குக் காட்டும்.
[24] நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, என்னை உமது பகைவனாகக் கருதுகிறீர்?
[25] காற்றில் பறக்கும் சருகை வேதனைப்படுத்துவீரோ? பதரைப் பின்னால் துரத்திச்செல்வீரோ?
[26] ஏனெனில் எனக்கெதிராகக் கசப்பானவற்றை நீர் எழுதுகிறீர்; என் வாலிப காலத்தின் பாவங்களை எனக்குப் அறுக்கச்செய்கிறீர்.
[27] நீர் எனது கால்களில் விலங்குகளை மாட்டுகிறீர், அடிச்சுவடுகளில் அடையாளமிட்டு என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறீர்.
[28] “ஆகவே அழுகிப்போன ஒன்றைப் போலவும், பூச்சி அரித்த உடையைப்போலவும் மனிதன் உருக்குலைந்து போகிறான்.