Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:49

[1] “பெண்ணினால் பெற்றெடுக்கப்பட்ட மனிதன் சில நாட்களே வாழ்கிறான், அவையும் கஷ்டம் நிறைந்தவையே.

[2] அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்; அவன் நிழலைப்போல் நிலையற்று மறைந்துபோகிறான்.

[3] அப்படிப்பட்டவனை நீர் கூர்ந்து கவனிப்பீரோ? அவனை நியாயந்தீர்ப்பதற்காக உமக்கு முன்பாகக் கொண்டுவருவீரோ?

[4] அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை உருவாக்க யாரால் முடியும்? யாராலுமே முடியாது!

[5] மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன; அவனுடைய மாதங்களையும் நீரே நிர்ணயித்திருக்கிறீர், அவன் கடக்கமுடியாத எல்லைகளைக் குறித்திருக்கிறீர்.

[6] ஒரு கூலியாள் தன் அன்றாட வேலை முடிந்தது என்று நிம்மதியாய் இருக்கிறானே. அதுபோல் நீரும் மனிதன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.

[7] “மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு: அது வெட்டிப்போடப்பட்டாலும் மீண்டும் தழைக்கும்; அதின் புதிய தளிர்கள் தவறாது முளைக்கும்.

[8] அதின் வேர் நிலத்தினடியில் பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,

[9] தண்ணீர் பட்டவுடனே அது துளிர்விட்டு ஒரு செடியைப்போல் கிளைவிட்டு வளரும்.

[10] மனிதனோ இறந்தபின், தன் இறுதி மூச்சைவிட்டு இல்லாதொழிந்து போகிறான்.

[11] கடல் தண்ணீர் வற்றி, வெள்ளம் வறண்டு கிடப்பதுபோலவும்

[12] மனிதன் படுத்துக்கிடக்கிறான், அவன் வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை; தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை.

[13] “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து, நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து, அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே!

[14] ஒரு மனிதன் இறந்துபோனால் திரும்பவும் அவன் வாழ்வானோ? ஆனாலும் என் கடின உழைப்பின் நாட்களிலெல்லாம் நான் எனது விடுதலைக்காகக் காத்திருப்பேன்.

[15] அப்பொழுது நீர் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன், நீர் உமது கரங்களின் படைப்பாகிய என்மேல் வாஞ்சையாயிருப்பீர்.

[16] நிச்சயமாக நீர் என் காலடிகளைக் கணக்கிடுவீர்; என் பாவத்தையோ கவனத்தில் கொள்ளமாட்டீர்.

[17] எனது குற்றங்கள் பையில் இடப்பட்டு முத்திரையிடப்படும்; நீர் எனது பாவங்களை மூடி மறைப்பீர்.

[18] “ஆனால் மலை இடிந்து விழுந்து கரைவதுபோலவும், பாறை தன் இடத்தைவிட்டு நகருவதுபோலவும்,

[19] தண்ணீர் கற்களை அரிப்பதுபோலவும், வெள்ளம் மணலை அடித்துச்செல்வது போலவும் மனிதனின் எதிர்பார்ப்பை நீர் அழித்துப் போடுகிறீர்.

[20] நீர் அவனை ஒரேயடியாக மேற்கொள்கிறீர், அவன் இல்லாமல் போகிறான்; நீர் அவன் முகத்தோற்றத்தை வேறுபடுத்தி, அவனை விரட்டிவிடுகிறீர்.

[21] அவனுடைய மகன்கள் மேன்மையடைந்தாலும், அவன் அதை அறியான்; அவர்கள் தாழ்த்தப்பட்டாலும், அதையும் அவன் காணமாட்டான்.

[22] ஆனால் தன் சொந்த உடலின் நோவை மட்டுமே அறிவான், அவன் தனக்காக மாத்திரமே துக்கப்படுகிறான்.”

யோபுவின் சரித்திரம் — Chapters