Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:37

[1] அப்படியே எல்லா இஸ்ரயேலின் வம்சாவழியும், இஸ்ரயேலின் அரசர்களின் பதிவேட்டில் எழுதப்பட்டன. யூதா மக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தபடியால் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

[2] தங்கள் சொந்த இடங்களில் உள்ள தங்கள் சொந்தப் பட்டணங்களுக்குத் திரும்பி வந்தவர்கள் சில இஸ்ரயேலரும், ஆசாரியரும், லேவியரும், ஆலய பணிவிடைக்காரருமே.

[3] யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே கோத்திரங்களிலிருந்து வந்து எருசலேமில் வாழ்ந்தவர்களின் பெயர்களாவன:

[4] யூதாவின் மகன் பேரேஸின் வழித்தோன்றலில் வந்த பானியின் மகனான இம்ரியின் மகனான உம்ரி பெற்ற அம்மியூத்தின் மகன் ஊத்தாய்.

[5] சீலோனியரைச் சேர்ந்தவர்கள்: முதற்பேறானவன் அசாயாவும் அவனுடைய மகன்களும்.

[6] சேராவியரைச் சேர்ந்தவர்கள்: யெகுயேலும், யூதாவின் 690 மக்களும்.

[7] பென்யமீனியரைச் சேர்ந்தவர்கள்: சல்லு என்பவன் அசெனுவாவின் மகனான ஓதாவியாவின் மகனான மெசுல்லாமின் மகன்.

[8] எரோகாமின் மகனான இப்னேயா; மிக்கிரியின் மகனான ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனான ரேகுயேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம்.

[9] பென்யமீனியர் அவர்களின் வம்சங்களின்படி, கணக்கிடப்பட்டபோது 956 பேராயிருந்தனர். இவர்கள் எல்லோரும் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர்.

[10] ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: யெதாயா, யோயாரீப், யாகின்.

[11] அசரியா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக் மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூபின் மகன், அகிதூப் இறைவனுடைய ஆலயத்திற்கு அதிகாரியாயிருந்தான்.

[12] அதாயா எரோகாமின் மகன், எரோகாம் பஸ்கூரின் மகன், பஸ்கூர் மல்கியாவின் மகன். மாசாய் ஆதியேலின் மகன், ஆதியேல் யாசெராவின் மகன், யாசெரா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் மெசில்லேமித்தின் மகன், மெசில்லேமித் இம்மேரின் மகன் என்பவர்களே.

[13] குடும்பங்களின் தலைவர்களாயிருந்த ஆசாரியர்கள் 1,760 பேர் இருந்தனர். இவர்கள் இறைவனுடைய ஆலயத்தில் பணிவிடைக்குத் திறமையுடையவர்களும் பொறுப்புடையவர்களுமாய் இருந்தனர்.

[14] லேவியரைச் சேர்ந்தவர்கள்: செமாயா அசூபின் மகன், அசூப் அஸ்ரீகாமின் மகன், அஸ்ரீகாம் மெராரி வம்சத்தைச் சேர்ந்த அசபியாவின் மகன்.

[15] லேவிய வம்சாவழியில் பக்பக்கார், ஏரேஸ், காலால், மத்தனியா ஆகியோரும் அடங்குவர். மத்தனியா மீகாவின் மகன், மீகா சிக்கிரியின் மகன், சிக்ரி ஆசாபின் மகன்.

[16] ஒபதியா செமாயாவின் மகன், செமாயா காலாலின் மகன், காலால் எதுத்தூனின் மகன்; பெரகியா ஆசாவின் மகன், ஆசா எல்க்கானாவின் மகன், எல்க்கானா நெத்தோபாத்தியரின் கிராமங்களில் வாழ்ந்து வந்தான்.

[17] வாசல் காவலரைச் சேர்ந்தவர்கள்: சல்லூம், அக்கூப், தல்மோன் அகீமான் என்பவர்களும், இவர்களின் சகோதரர்களும். சல்லூம் அவர்களுடைய தலைவன்.

[18] அவனே கிழக்கிலுள்ள அரச வாசலை இந்நாள்வரை காவல் செய்பவன். இவர்களே லேவிய முகாமைச் சேர்ந்த வாசல் காவலர்.

[19] கோராகின் மகனாகிய எபியாசாப்புக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடை வேலையை விசாரித்தார்கள். அவர்கள் தந்தையர்கள் யெகோவாவின் ஆலய வாசலைக் காவல்செய்வதற்குப் பொறுப்பாயிருந்தது போலவே, கூடாரத்திற்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.

[20] முற்காலத்தில் எலெயாசாரின் மகன் பினெகாஸ் வாசல் காப்போருக்குப் பொறுப்பாய் இருந்தான். யெகோவா அவனுடன் இருந்தார்.

[21] மெசெல்மியாவின் மகன் சகரியா சபைக் கூடாரத்திற்கு வாசல் காவலனாயிருந்தான்.

[22] வாசல்களிலெல்லாம் காவலிருக்க தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் 212 பேர். அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வம்சாவழியின்படியே பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். தாவீதும் தரிசனக்காரனான சாமுயேலும் இவர்களை நம்பிக்கைக்குரிய பதவிகளுக்கு அமர்த்தினர்.

[23] அவர்களும் அவர்களுடைய சந்ததிகளும் கூடாரம் என்று அழைக்கப்பட்ட யெகோவாவினுடைய ஆலயத்தின் வாசலைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.

[24] வாசல் காவலர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் இருந்தார்கள்.

[25] அவர்களுடைய சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து காலத்திற்குக் காலம் ஏழுநாட்களுக்கு கடமைகளைப் பகிர்ந்துகொள்ள வரவேண்டிருந்தது.

[26] ஆனால் லேவியர்களான நான்கு பிரதான வாசல் காவலர்களிடம் இறைவனின் ஆலயத்தின் பண்டகசாலைகளுக்கும், பொக்கிஷ சாலைகளுக்கும் காவல்காப்பதற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

[27] இறைவனது ஆலயத்தைச் சுற்றிக் காவல் காக்கவேண்டியிருந்ததால் இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே தங்கவேண்டும். அதோடு ஒவ்வொருநாள் காலையிலும் ஆலயத்தைத் திறக்கும் திறப்புக்கும் அவர்களே பொறுப்பாயிருந்தனர்.

[28] அவர்களில் சிலர் ஆலயத்தின் பணிக்கு பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். அவர்கள் பொருட்களை உள்ளே கொண்டுவரும்போதும், வெளியே கொண்டுபோகும் போதும் அவற்றைக் கணக்கிட்டார்கள்.

[29] மற்றவர்கள் பரிசுத்த இடத்தின் பாத்திரங்களையும், மெல்லிய மாவு, திராட்சை இரசம், எண்ணெய், சாம்பிராணி மற்றும் நறுமணப் பொருட்களையும் மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்டார்கள்.

[30] அத்துடன் சில ஆசாரியர்கள் நறுமணப் பொருட்களைக் கலப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.

[31] கோராகியனான சல்லூமின் மூத்த மகனான மத்தித்தியா என்ற லேவியனிடம் காணிக்கை அப்பங்களைச் சுடும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

[32] அவர்களின் சகோதரரான கோகாத்தியரில் சிலர், ஒவ்வொரு ஓய்வுநாளுக்கும் தேவையான அப்பங்களை மேஜையில் ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பாயிருந்தனர்.

[33] லேவிய குடும்பத் தலைவர்களான இசைக் கலைஞர்கள் இரவும் பகலும் இடைவிடாது பணிசெய்ய வேண்டியிருந்ததால், மற்ற வேலைகளிலிருந்து விடுபட்டு ஆலயத்தின் அறைகளிலேயே தங்கியிருந்தனர்.

[34] இவர்கள் எல்லோரும் லேவியக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் தங்கள் வம்சங்களின்படி பதிவு செய்யப்பட்ட தலைவர்கள். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.

[35] கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான். இவனது மனைவியின் பெயர் மாக்காள்.

[36] இவனது மூத்த மகன் அப்தோன். அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,

[37] கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்கள்.

[38] மிக்லோத் சிமியாமின் தகப்பன்; இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

[39] நேர் என்பவன் கீஷின் தகப்பன்; கீஷ் சவுலின் தகப்பன்; சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தகப்பன்.

[40] யோனத்தானின் மகன்: மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.

[41] மீகாவின் மகன்கள்: பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ்.

[42] ஆகாஸ் யாராக்கின் தகப்பன். யாராக் அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி ஆகியோரின் தகப்பன், சிம்ரி மோசாவின் தகப்பன்,

[43] மோசா பினியாவின் தகப்பன், அவன் மகன் ரப்பாயா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல்.

[44] ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர்; அவர்கள் அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மயேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் யாவரும் ஆத்சேலின் மகன்கள்.

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் — Chapters