Skip to content
Opens in a new window

[1] தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது.

[2] ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது.

[3] தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது.

[4] ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது.

[5] பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.

[6] 40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

[7] ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.

[8] பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான்.

[9] பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.

[10] பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான்.

[11] அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான்.

[12] பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.

[13] அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது.

[14] இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.

[15] அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:

[16] “நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள்.

[17] உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்” என்றார்.

[18] அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள்.

[19] பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன.

[20] அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

[21] சுகந்த வாசனையைக் யெகோவா முகர்ந்தார். அப்பொழுது யெகோவா: “இனி நான் மனிதனுக்காக பூமியை சபிப்பதில்லை; மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவனுடைய சிறுவயது தொடங்கி பொல்லாததாக இருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில்லை.

[22] பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

ஆதியாகமம் — Chapters