[1] பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
[2] மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
[3] அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
[4] பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
[5] மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார்.
[6] அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள்.
[7] நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார்.
[8] அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.
[9] பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் யெகோவா அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல் எனப்பட்டது; யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.
[10] சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான்.
[11] சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
[12] அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான்.
[13] சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
[14] சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான்.
[15] ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
[16] ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான்.
[17] பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
[18] பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான்.
[19] ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
[20] ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான்.
[21] செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
[22] செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான்.
[23] நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
[24] நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான்.
[25] தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
[26] 70 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
[27] தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான்.
[28] ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான்.
[29] ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள்; ஆபிராமுடைய மனைவிக்கு சாராய் என்று பெயர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பெயர்; இவள் ஆரானுடைய மகள்; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
[30] சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள்.
[31] தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள்.
[32] தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.