Skip to content
Opens in a new window

[1] ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.

[2] அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.

[3] ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.

[4] ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

[5] ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.

[6] சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.

[7] சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

[8] சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.

[9] ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.

[10] ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

[11] ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான்.

[12] கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.

[13] கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

[14] கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான்.

[15] மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.

[16] மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.

[17] மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான்.

[18] யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.

[19] யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

[20] யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.

[21] ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.

[22] ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.

[23] ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.

[24] ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

[25] மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.

[26] மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.

[27] மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.

[28] லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,

[29] “யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.

[30] லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.

[31] லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.

[32] நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் — Chapters