Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:49

[1] பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடு இருக்கவும் விரும்பாதே.

[2] அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும்.

[3] வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.

[4] அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.

[5] ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான்.

[6] நல்யோசனைசெய்து யுத்தம்செய்; ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும்.

[7] மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான்.

[8] தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான்.

[9] தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன்.

[10] ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், உன்னுடைய பெலன் குறுகினது.

[11] மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் விடுவிக்க முடிந்தால் விடுவி.

[12] அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ?

[13] என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும்.

[14] அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.

[15] துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

[16] நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

[17] உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக.

[18] யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.

[19] பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

[20] துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும்.

[21] என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரர்களோடு சேராதே.

[22] திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்?

[23] பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல.

[24] துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், குடிமக்கள் அவனை வெறுப்பார்கள்.

[25] அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.

[26] செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம்.

[27] வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு.

[28] நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

[29] அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.

[30] சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

[31] இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.

[32] அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.

[33] இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?

[34] உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.

நீதிமொழிகள் — Chapters