Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:15

[1] என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக,

[2] நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

[3] ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

[4] அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்,

[5] அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

[6] யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.

[7] அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார்.

[8] அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

[9] அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.

[10] ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது,

[11] நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

[12] அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும்,

[13] இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,

[14] தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

[15] மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

[16] தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,

[17] ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய்.

[18] அவளுடைய வீடு மரணத்திற்கும், அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது.

[19] அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

[20] ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்.

[21] நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

[22] துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள்.

நீதிமொழிகள் — Chapters