Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:44

[1] பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.

[2] மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

[3] துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.

[4] மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.

[5] வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல.

[6] மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்.

[7] மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி.

[8] கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.

[9] தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.

[10] யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.

[11] செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.

[12] அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

[13] காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.

[14] மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?

[15] புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.

[16] ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

[17] தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.

[18] சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும்.

[19] பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.

[20] அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.

[21] மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.

[22] மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

[23] தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.

[24] நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.

நீதிமொழிகள் — Chapters