Skip to content
Opens in a new window
Listen to this chapter • 9:54

[1] அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது; பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான். ஏரோது கலிலேயாவை ஆண்டான். ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயாவையும் திராகொனித்தி நாட்டையும் ஆண்டான்.

[2] அன்னாவும், காய்பாவும் தலைமை ஆசாரியராக இருந்தனர். அப்போது சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. யோவான் வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தான்.

[3] யோர்தான் நதியைச் சுற்றிலுமுள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் யோவான் சென்றான். அவன் மக்களுக்குப் போதித்தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான்.

[4] இது ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளின் நிறைவேறுதலாக அமைந்தது: “வனாந்தரத்தில் யாரோ ஒரு மனிதன் கூவிக்கொண்டிருக்கிறான்: ‘கர்த்தருக்கு வழியைத் தயார் செய்யுங்கள். அவருக்குப் பாதையை நேராக்குங்கள்.

[5] பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். ஒவ்வொரு மலையும் குன்றும் மட்டமாக்கப்படும். திருப்பம் மிக்க பாதைகள் நேராக்கப்படும். கரடுமுரடான பாதைகள் மென்மையாகும்.

[6] ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான்.’”

[7] யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறும்பொருட்டு மக்கள் வந்தனர். யோவான் அவர்களை நோக்கி, “நீங்கள் விஷம் பொருந்திய பாம்புகளைப் போன்றவர்கள். வரவிருக்கும் தேவனுடைய கோபத்தினின்று ஓடிப் போக யார் உங்களுக்கு எச்சரிக்கை செய்தனர்?

[8] உங்கள் இதயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டவல்ல செயல்களை நீங்கள் செய்தல் வேண்டும். ‘ஆபிரகாம் எங்கள் தந்தை’ என்று பெருமை பாராட்டிக் கூறாதீர்கள். தேவன் இந்தப் பாறைகளில் இருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உருவாக்கக்கூடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

[9] மரங்களை வெட்டும்படிக்குக் கோடாரி வைக்கப்பட்டுள்ளது. நல்ல பழங்களைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்” என்றான்.

[10] மக்கள் யோவானை நோக்கி, “நாங்கள் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டனர்.

[11] அவர்களுக்கு யோவான், “உங்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தால், ஒரு மேலாடைகூட இல்லாத மனிதனுக்கு ஒன்றைக் கொடுங்கள். உங்களிடம் உணவிருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று பதிலுரைத்தான்.

[12] வரி வசூலிப்போரும்கூட யோவானிடம் வந்தனர். அவர்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினர். அவர்கள் யோவானிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

[13] அவர்களிடம் யோவான், “எந்த அளவுக்கு வரி வசூலிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு வரி வாங்குவதன்றி அதிகமாக வசூலிக்காதீர்கள்” என்று கூறினான்.

[14] வீரர்கள் யோவானை நோக்கி, “எங்களைப்பற்றி என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர்களுக்கு யோவான், “உங்களுக்குப் பணம் தரும்பொருட்டு மக்களை ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள். யாரைக்குறித்தும் பொய் சொல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறினான்.

[15] எல்லா மக்களும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருந்தனர். எனவே யோவானைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் கொண்டனர். அவர்கள், “இவன் கிறிஸ்துவாக இருக்கக்கூடும்” என்று எண்ணினர்.

[16] அவர்கள் அனைவரிடமும் பேசிய யோவான், “நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப் பின்னால் வருகிறவரோ நான் செய்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய வல்லவர். அவரது மிதியடிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் ஆவியானவராலும், அக்கினியாலும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

[17] தானியங்களைச் சுத்தமாக்குவதற்குத் தயாராக அவர் வருவார். பதரிலிருந்து தானியத்தைப் பிரித்துக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவர் எரிப்பார். அணைக்க முடியாத நெருப்பில் அவற்றைச் சுட்டெரிப்பார்,” என்று பதில் கூறினான்.

[18] யோவான் நற்செய்தியைத் தொடர்ந்து போதித்து, மக்களுக்கு உதவும்படியான மற்ற பல காரியங்களையும் சொல்லி வந்தான்.

[19] ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக்கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான்.

[20] எனவே ஏரோது இன்னொரு தீய காரியத்தையும் செய்தான். அவன் யோவானை சிறையிலிட்டான். ஏரோது செய்த பல தீய காரியங்களோடு கூட இதுவும் ஒரு தீய செயலாக அமைந்தது.

[21] யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு அவனால் எல்லா மக்களும் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசுவும் அப்போது அங்கு வந்து அவனிடம் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது வானம் திறந்தது.

[22] பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார். ஆவியானவர் ஒரு புறாவைப்போலத் தோற்றமளித்தார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அது “நீர் என் அன்புள்ள குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.

[23] இயேசு போதிக்க ஆரம்பித்தபோது ஏறக்குறைய முப்பது வயது நிரம்பியவராக இருந்தார். மக்கள் இயேசுவை யோசேப்பின் குமாரன் என்றே எண்ணினர். யோசேப்பு ஏலியின் குமாரன்.

[24] ஏலி மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் லேவியின் குமாரன். லேவி மெல்கியின் குமாரன். மெல்கி யன்னாவின் குமாரன். யன்னா யோசேப்பின் குமாரன்.

[25] யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன். மத்தத்தியா ஆமோஸின் குமாரன். ஆமோஸ் நாகூமின் குமாரன். நாகூம் எஸ்லியின் குமாரன். எஸ்லி நங்காயின் குமாரன்

[26] நங்காய் மாகாத்தின் குமாரன். மாகாத் மத்தத்தியாவின் குமாரன். மத்தத்தியா சேமேயின் குமாரன். சேமேய் யோசேப்பின் குமாரன். யோசேப்பு யூதாவின் குமாரன்.

[27] யூதா யோவன்னாவின் குமாரன். யோவன்னா ரேசாவின் குமாரன். ரேசா செரூபாபேலின் குமாரன். செரூபாபேல் சலாத்தியேலின் குமாரன். சலாத்தியேல் நேரியின் குமாரன்.

[28] நேரி மெல்கியின் குமாரன். மெல்கி அத்தியின் குமாரன். அத்தி கோசாமின் குமாரன். கோசாம் எல்மோதாமின் குமாரன். எல்மோதாம் ஏரின் குமாரன்.

[29] ஏர் யோசேயின் குமாரன். யோசே எலியேசரின் குமாரன். எலியேசர் யோரீமின் குமாரன். யோரீம் மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் லேவியின் குமாரன்.

[30] லேவி சிமியோனின் குமாரன். சிமியோன் யூதாவின் குமாரன். யூதா யோசேப்பின் குமாரன். யோசேப்பு யோனானின் குமாரன். யோனான் எலியாக்கீமின் குமாரன்.

[31] எலியாக்கீம் மெலெயாவின் குமாரன். மெலெயா மயினானின் குமாரன். மயினான் மத்தாத்தாவின் குமாரன். மத்தாத்தா நாத்தானின் குமாரன். நாத்தான் தாவீதின் குமாரன்.

[32] தாவீது ஈசாயின் குமாரன். ஈசாய் ஓபேதின் குமாரன். ஓபேத் போவாசின் குமாரன். போவாஸ் சல்மோனின் குமாரன். சல்மோன் நகசோனின் குமாரன்.

[33] நகசோன் அம்மினதாபின் குமாரன். அம்மினதாப் ஆராமின் குமாரன். ஆராம் எஸ்ரோமின் குமாரன். எஸ்ரோம் பாரேசின் குமாரன். பாரேஸ் யூதாவின் குமாரன்.

[34] யூதா யாக்கோபின் குமாரன். யாக்கோபு ஈசாக்கின் குமாரன். ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன். ஆபிரகாம் தேராவின் குமாரன். தேரா நாகோரின் குமாரன்.

[35] நாகோர் சேரூக்கின் குமாரன். சேரூக் ரெகூவின் குமாரன். ரெகூ பேலேக்கின் குமாரன். பேலேக் ஏபேரின் குமாரன். ஏபேர் சாலாவின் குமாரன்.

[36] சாலா காயினானின் குமாரன். காயினான் அர்பக்சாத்தின் குமாரன். அர்பக்சாத் சேமின் குமாரன். சேம் நோவாவின் குமாரன். நோவா லாமேக்கின் குமாரன்.

[37] லாமேக் மெத்தூசலாவின் குமாரன். மெத்தூசலா ஏனோக்கின் குமாரன். ஏனோக் யாரேதின் குமாரன். யாரேத் மகலாலெயேலின் குமாரன். மகலாலெயேல் கேனானின் குமாரன். கேனான் ஏனோஸின் குமாரன்.

[38] ஏனோஸ் சேத்தின் குமாரன். சேத் ஆதாமின் குமாரன். ஆதாம் தேவனின் குமாரன்.

லூக்கா — Chapters