Skip to content
Opens in a new window
Listen to this chapter • 10:30

[1] அக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது.

[2] அதுவே முதல் பதிவாக இருந்தது. சீரியாவின் ஆளுநராக சிரேனியு இருந்தபோது அது நடந்தது.

[3] எல்லா மக்களும் பதிவு செய்வதற்கென தங்கள் சொந்த நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்கள்.

[4] கலிலேயாவில் உள்ள நகரமாகிய நாசரேத்தை விட்டு யோசேப்பு புறப்பட்டான். யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்னும் நகரத்துக்குச் சென்றான். பெத்லகேம் தாவீதின் நகரம் ஆகும். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையால் யோசேப்பு அங்கு சென்றான்.

[5] மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.)

[6] யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்தபோது மரியாளின் குழந்தைப் பேற்றுக்காலம் நெருங்கியது.

[7] அவள் தன் முதல் குமாரனைப் பெற்றெடுத்தாள். விடுதிகளில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மரியாள் குழந்தையைத் துணிகளால் சுற்றி ஆடுமாடுகள் உணவு உண்ணும் ஓர் இடத்தில் வைத்தாள்.

[8] அந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர்.

[9] தேவதூதன் அம்மேய்ப்பர்கள் முன்னே தோன்றினான். கர்த்தரின் மகிமை அவர்களைச் சுற்றிலும் ஒளிவீசியது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தனர்.

[10] தூதன் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.

[11] தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர்.

[12] ஒரு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு ஆடுமாடுகள் உணவுண்ணும் இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே நீங்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்குரிய அடையாளம்” என்றான்.

[13] அதே சமயத்தில் ஒரு பெரிய கூட்டமான தூதர்கள் பரலோகத்திலிருந்து வந்து முதல் தூதனோடு சேர்ந்துகொண்டார்கள். எல்லா தூதர்களும்,

[14] “பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள். பூமியில் தேவனை பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்று சொல்லி தேவனைப் போற்றினார்கள்.

[15] தூதர்கள் மேய்ப்பர்களிடமிருந்து கிளம்பி மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார்கள். மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர், “நாம் பெத்லகேமுக்குப் போய் கர்த்தரால் நமக்குத் தெரிவிக்கப்பட்ட இக்காரியத்தைக் காண்போம்” என்று கூறிக்கொண்டனர்.

[16] எனவே மேய்ப்பர்கள் வேகமாகச் சென்று மரியாளையும் யோசேப்பையும் கண்டனர். குழந்தை ஆடுமாடுகள் உணவு உண்ணும் இடத்தில் படுத்திருந்தது.

[17] மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்த்தனர். பின்பு தூதர்கள் குழந்தையைக்குறித்துக் கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள்.

[18] மேய்ப்பர்கள் கூறியவற்றைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

[19] மரியாள் அவற்றைத் தன் இதயத்தில் வைத்துக்கொண்டாள். அவள் அவற்றைக்குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

[20] தாங்கள் கண்டவற்றிற்காகவும் கேட்டவற்றிற்காகவும் தேவனை வாழ்த்திக்கொண்டும், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டும், மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகள் இருந்த இடத்திற்குச் சென்றனர். தூதர்கள் அவர்களிடம் கூறியபடியே அனைத்தும் நடந்திருக்கக் கண்டனர்.

[21] குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனதும், விருத்தசேதனம் செய்யப்பட்டது. அதற்கு “இயேசு” என்று பெயரிட்டனர். மரியாளின் கரு உருவாகுமுன்னே தூதன் குழந்தைக்கு வைத்த பெயர் இதுவேயாகும்.

[22] குழந்தை பெற்ற பெண் சுத்தமாகும் பொருட்டு மோசேயின் விதிகள் கூறியவற்றைச் செய்யும்படியான காலம் வந்தது. யோசேப்பும், மரியாளும், இயேசுவை தேவனிடம் அர்ப்பணிக்குமாறு எருசலேமுக்குக் கொண்டு வந்தனர்.

[23] தேவனுடைய பிரமாணத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “வீட்டின் முதற்பேறான குமாரன் பிறந்ததும் அவன், ‘தேவனுக்கு விசேஷமானவனாகக் கருதப்படுவான்.’”

[24] “இரண்டு காட்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகக் கொடுக்கக்வேண்டும்” என்றும் கூறுகிறது. எனவே இதைச் செய்வதற்காக யோசேப்பும், மரியாளும் எருசலேமுக்குச் சென்றனர்.

[25] எருசலேமில் சிமியோன் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் வாழ்ந்தான். அவன் நல்லவனும், பக்திமானுமாக இருந்தான். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உதவும் காலத்தை சிமியோன் எதிர்பார்த்திருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவனோடு இருந்தார்.

[26] கர்த்தரிடமிருந்து வரும் கிறிஸ்துவைக் காணுமட்டும் அவன் மரிப்பதில்லை என்று பரிசுத்த ஆவியனவர் சிமியோனுக்குக் கூறியிருந்தார்.

[27] ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர்.

[28] சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு,

[29] “ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும்.

[30] நீர் நல்கும் இரட்சிப்பை என் கண்களால் கண்டேன்.

[31] நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர்.

[32] யூதரல்லாத மக்களுக்கு உம் வழியைக் காட்டும் ஒளி அவர். உம் மக்களாகிய இஸ்ரவேலுக்கு பெருமையை அவர் தருவார்” என்று தேவனுக்கு நன்றி செலுத்தினான்.

[33] இயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர்.

[34] சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து இயேசுவின் தாயாகிய மரியாளிடம், “இந்தப் பாலகனின் நிமித்தமாக யூதர்கள் விழுவர்; பலர் எழுவர். சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாத தேவனின் அடையாளமாக இவர் இருப்பார்.

[35] இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான்.

[36] தேவாலயத்தில் அன்னாள் என்னும் பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் ஆசேர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த பானுவேல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அன்னாள் வயது முதிர்ந்தவள். அவள் திருமணமாகித் தன் கணவனுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவள்.

[37] பின் அவள் கணவன் இறந்து போனான். அவள் தனித்து வாழ்ந்து வந்தாள். அவள் எண்பத்து நான்கு வயது முதியவளாக இருந்தாள். அன்னாள் எப்போதும் தேவாலயத்திலேயே இருந்தாள். அவள் உபவாசமிருந்து இரவும் பகலும் தேவனை வழிபட்டுக்கொண்டிருந்தாள்.

[38] தேவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அன்னாளும் அப்போது அங்கே இருந்தாள். தேவன் எருசலேமுக்கு விடுதலை அருள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எல்லா மக்களுக்கும் அவள் இயேசுவைக் குறித்துக் கூறினாள்.

[39] தேவனின் பிரமாணம் கட்டளையிட்டபடியே அனைத்துக் காரியங்களையும் யோசேப்பும், மரியாளும் செய்து வந்தனர். பின்னர் கலிலேயாவில் உள்ள தங்கள் சொந்த நகரமாகிய நாசரேத்திற்குத் திரும்பினர்.

[40] சிறு பாலகன் வளர்ந்து வந்தார். அவர் வல்லமையும், ஞானமும் உடையவரானார். தேவனின் ஆசீர்வாதம் அவரோடிருந்தது.

[41] ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்காக இயேசுவின் பெற்றோர் எருசலேமுக்குச் சென்று வந்தனர்.

[42] வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர்.

[43] பண்டிகை நாட்கள் முடிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுக்குத் தெரியாமலேயே இயேசு எருசலேமில் தங்கிவிட்டார்.

[44] யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர்.

[45] ஆனால் யோசேப்பும் மரியாளும் கூட்டத்தில் இயேசுவைக் காணாததால் அவரைத் தேடும்பொருட்டு எருசலேமுக்குத் திரும்பினர்.

[46] மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைக் கண்டனர். மத போதகர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்களிடம் வினா எழுப்புவதுமாக இயேசு தேவாலயத்திற்குள் அமர்ந்திருந்தார்.

[47] எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டனர். அவரது புரிந்துகொள்ளும் திறனையும் ஞானம் நிரம்பிய பதில்களையும் உணர்ந்து அவர்கள் வியந்தனர்.

[48] இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள்.

[49] இயேசு அவர்களை நோக்கி, “ஏன் என்னைத் தேடினீர்கள்? எனது பிதாவின் வேலை இருக்கிற இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!” என்றார்.

[50] அவர் கூறியதன் ஆழமான உள் பொருளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

[51] இயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

[52] இயேசு மேலும், மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.

லூக்கா — Chapters