[1] கோடைக்காலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.
[2] அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது.
[3] குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.
[4] மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய்.
[5] மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான்.
[6] மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.
[7] நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
[8] மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான்.
[9] மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்.
[10] பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, மூடனையும் வேலைவாங்குகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான்.
[11] நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான்.
[12] தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம்.
[13] வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
[14] கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
[15] சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
[16] புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
[17] வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான்.
[18] கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
[19] அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான்.
[20] விறகில்லாமல் நெருப்பு அணையும்; கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும்.
[21] கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
[22] கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.
[23] நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும்.
[24] பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான்.
[25] அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
[26] பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
[27] படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
[28] பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.