Skip to content
Opens in a new window

[1] சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.

[2] அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

[3] யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

[4] சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

[5] கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.

[6] நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

[7] நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.

[8] இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.

[9] உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.

[10] கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.

[11] நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

[12] பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.

[13] புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

[14] ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

[15] செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.

[16] நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

[17] புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.

[18] பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.

[19] சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

[20] நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

[21] நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.

[22] யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.

[23] தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

[24] துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

[25] சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;

[26] பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

[27] யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.

[28] நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.

[29] யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.

[30] நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.

[31] நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.

[32] நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.

நீதிமொழிகள் — Chapters