Skip to content
Opens in a new window

[1] “ஏழாம் மாதம் முதல் தேதி பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்தஒரு வேலையும் செய்யக்கூடாது; அது உங்களுக்கு எக்காளம் ஊதும் நாளாக இருக்கவேண்டும்.

[2] அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,

[3] அவைகளுக்கு அடுத்த உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,

[4] ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,

[5] உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,

[6] மாதப்பிறப்பின் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், தினந்தோறும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் தவிர, இவைகளையும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும்.

[7] “இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதிலே நீங்கள் எந்தஒரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி,

[8] யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,

[9] அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,

[10] ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,

[11] பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்.

[12] “ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது; ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கவேண்டும்.

[13] நீங்கள் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

[14] அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,

[15] பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,

[16] நிரந்தர தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

[17] “இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

[18] காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,

[19] நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

[20] “மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

[21] காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,

[22] நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

[23] “நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

[24] காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,

[25] நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

[26] “ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

[27] காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,

[28] நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

[29] “ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

[30] காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,

[31] நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலிகளையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

[32] “ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

[33] காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,

[34] நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

[35] “எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.

[36] அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையுள்ள தகனமான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,

[37] காளையும், ஆட்டுக்கடாவும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,

[38] நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

[39] “உங்களுடைய பொருத்தனைகளையும், உங்களுடைய உற்சாகபலிகளையும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளையும், உங்களுடைய உணவுபலிகளையும், உங்களுடைய பானபலிகளையும், உங்களுடைய சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்களுடைய பண்டிகைகளிலே யெகோவாவுக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.

[40] யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னான்.

எண்ணாகமம் — Chapters