Skip to content
Opens in a new window

[1] இஸ்ரவேல் மக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், யெகோவா சீனாய் வனாந்திரத்தில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

[2] “நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள்.

[3] இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள்.

[4] ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களோடு இருக்கவேண்டும்; அவன் தன்னுடைய பிதாக்களின் வம்சத்திற்குத் தலைவனாக இருக்கவேண்டும்.

[5] உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர்.

[6] சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல்.

[7] யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன்.

[8] இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல்.

[9] செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப்.

[10] யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல்.

[11] பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.

[12] தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.

[13] ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல்.

[14] காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப்.

[15] நப்தலி கோத்திரத்தில் ஏனானின் மகன் அகீரா.

[16] இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களுமாக இருப்பவர்கள் என்றார்.

[17] அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதர்களைக் கூட்டிக்கொண்டு,

[18] இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படியும், முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், பெயர் கணக்கின்படியும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்களுடைய வம்சாவளியைத் தெரிவித்தார்கள்.

[19] இப்படிக் யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களை சீனாய் வனாந்திரத்தில் எண்ணிப்பார்த்தான்.

[20] இஸ்ரவேலின் மூத்தமகனாகிய ரூபன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,

[21] ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 46,500 பேர்.

[22] சிமியோன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,

[23] சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர்.

[24] காத் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

[25] காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 45,650 பேர்.

[26] யூதா சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

[27] யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 74,600 பேர்.

[28] இசக்கார் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

[29] இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 54,400 பேர்.

[30] செபுலோன் சந்ததியாருடைய புறப்படக்கூடிய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

[31] செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 57,400 பேர்.

[32] யோசேப்பின் மகன்களில் எப்பிராயீம் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

[33] எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 40,500 பேர்.

[34] மனாசே சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

[35] மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 32,200 பேர்.

[36] பென்யமீன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

[37] பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர்.

[38] தாண் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

[39] தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர்.

[40] ஆசேர் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

[41] ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 41,500 பேர்.

[42] நப்தலி சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

[43] நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 53,400 பேர்.

[44] எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய கோத்திரங்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.

[45] இஸ்ரவேல் பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்களாகிய எண்ணப்பட்ட நபர்கள் எல்லோரும்,

[46] 6,03,550 பேராயிருந்தார்கள்.

[47] லேவியர்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடன் எண்ணப்படவில்லை.

[48] யெகோவா மோசேயை நோக்கி:

[49] “நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும்,

[50] லேவியர்களைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய எல்லா பணிப்பொருட்களுக்கும், அதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் பொறுப்பாளர்களாக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும் சுமக்க வேண்டும்; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.

[51] சாட்சியின் வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர்கள் அதை இறக்கிவைத்து, அது நிறுவப்படும்போது, லேவியர்கள் அதை எடுத்து நிறுத்தவேண்டும்; அந்நியன் அதற்கு அருகில் வந்தால் கொலை செய்யப்படவேண்டும்.

[52] இஸ்ரவேல் மக்கள் தங்கள் தங்கள் முகாமோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடவேண்டும்.

[53] இஸ்ரவேல் மக்களாகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடி லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிட்டு, லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.

[54] யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.

எண்ணாகமம் — Chapters