Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:59

[1] முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும்,

[2] முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.

[3] ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.

[4] விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது.

[5] ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.

[6] சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.

[7] அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.

[8] ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.

[9] அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து,

[10] குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

[11] இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி,

[12] முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள்.

[13] அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.

[14] எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

[15] ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.

[16] விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.

[17] நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.

[18] போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

[19] மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

[20] மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.

[21] நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன்.

[22] யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.

[23] நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.

[24] சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.

[25] அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.

1 தீமோத்தேயு — Chapters