[1] கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
[2] எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.
[3] அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து,
[4] தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும்.
[5] ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
[6] அவன் பெருமை அடைந்து, சாத்தானைப்போல தண்டனையிலே விழாதபடிக்கு, புதிய சீடனாக இருக்கக்கூடாது.
[7] அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.
[8] அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும்,
[9] விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
[10] மேலும், இவர்கள் முதலில் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களென்றால் உதவிக்காரர்களாக ஊழியம் செய்யலாம்.
[11] அப்படியே பெண்களும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.
[12] மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும்.
[13] இப்படி உதவிக்காரர்களுடைய ஊழியத்தை நன்றாகச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
[14] நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன்.
[15] தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது.
[16] அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.