[1] செத்த ஈக்கள் நறுமணத் தைலத்திலும் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதுபோலவே ஒரு சிறு மூடத்தனம் ஞானத்திற்கும், மதிப்பிற்கும் மேலோங்கி நிற்கும்.
[2] ஞானமுள்ளவர்களின் இருதயம் நியாயத்தின் பக்கம் சாய்கிறது, மூடர்களின் இருதயமோ வழிவிலகிப் போவதையே தேடுகிறது.
[3] ஒரு மூடன் வீதியில் போகும்போதே, புத்தியற்றவனாக நடந்து எல்லோருக்கும் தான் எவ்வளவு மதியீனன் என்பதைக் காண்பிக்கிறான்.
[4] ஒரு ஆளுநனின் கோபம் உனக்கெதிராக மூண்டால், நீ உன் பதவியைவிட்டு விலகாதே; நிதானமாயிருந்தால் பெரிய குற்றமும் மன்னிக்கப்படும்.
[5] சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீமையும் உண்டு, ஒரு ஆளுநனிடமிருந்து வரும் ஒருவிதத் தவறே அது.
[6] மூடர்கள் பல உயர்ந்த பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்; செல்வந்தர்களோ தாழ்ந்த பதவிகளையே வகிக்கிறார்கள்.
[7] அடிமைகள் குதிரையில் ஏறிச் சவாரி செய்கிறதை நான் கண்டிருக்கிறேன்; பிரபுக்களோ அடிமைகளைப்போல் நடந்து செல்வதையும் கண்டிருக்கிறேன்.
[8] குழி ஒன்றை வெட்டுகிறவன் அதில் விழக்கூடும்; பழைய சுவரை இடிப்பவனையும் பாம்பு கடிக்கக்கூடும்.
[9] கற்களைக் குழிகளில் தோண்டி எடுப்பவன் அவற்றால் காயப்படக்கூடும்; மரக்கட்டையை பிளக்கிறவனுக்கு அதனாலே ஆபத்து உண்டாகலாம்.
[10] ஒரு கோடரி மழுங்கிப் போய் அதின் முனை கூர்மையாக்கப்படாமல் இருந்தால், அதிக பலம் வேண்டியிருக்கும். ஆனால் தொழில் திறமையோ வெற்றியைக் கொண்டுவரும்.
[11] ஒரு பாம்பை வசியப்படுத்துமுன் அது கடிக்குமானால், அதை வசியப்படுத்தும் வித்தைத் தெரிந்தும் பயனில்லை.
[12] ஞானமுள்ளவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தயவுள்ளவைகள்; மூடனோ தன் உதடுகளாலேயே அழிக்கப்படுகிறான்.
[13] அவனுடைய வார்த்தைகள் ஆரம்பத்தில் மூடத்தனமானவை; முடிவிலோ கொடிய பைத்தியக்காரத்தனமானவை.
[14] மூடன் வார்த்தைகளை அதிகமாக்குகிறான். ஒரு மனிதனும் வரப்போவதை அறியான். அவனுக்குப்பின் என்ன நடக்கும் என்பதை யாரால் அவனுக்குச் சொல்லமுடியும்?
[15] மூடனின் வேலை அவனையே களைப்படையச் செய்யும்; ஏனெனில், பட்டணத்திற்குப் போகும் வழி அவனுக்குத் தெரியாது.
[16] அடிமையை அரசனாகவும் விடியற்காலமே விருந்து உண்கிறவர்களை பிரபுக்களாகவும் கொண்ட நாடே, உனக்கு ஐயோ!
[17] உயர்குடியில் பிறந்தவனை அரசனாகக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய். குடிபோதைக்கு அல்லாமல் தங்கள் பெலத்திற்காக உரிய நேரத்தில் சாப்பிடுகிற இளவரசர்களைக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய்.
[18] சோம்பேறியினுடைய வீட்டுக்கூரை வளைந்து தொங்கும்; செயலற்ற கைகளினால் அவனுடைய வீடு ஒழுகும்.
[19] மகிழ்ச்சிக்காகவே விருந்து செய்யப்படுகிறது, திராட்சை இரசம் வாழ்க்கையை களிப்புள்ளதாக்குகிறது, ஆனால் எல்லாவற்றிற்கும் தேவையானது பணமே.
[20] உனது சிந்தனையிலும் அரசனை நிந்திக்காதே, உனது படுக்கை அறையிலும் பணக்காரனை சபிக்காதே, ஏனெனில் ஆகாயத்துப் பறவை உன் வார்த்தைகளைக் கொண்டு செல்லலாம், சிறகடிக்கும் பறவை நீ சொல்வதைப் போய்ச் சொல்லலாம்.