Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:45

[1] தாவீதின் மகனும், எருசலேமின் அரசனுமான பிரசங்கியின் வார்த்தைகள்:

[2] “அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! முற்றிலும் அர்த்தமற்றவை; எல்லாமே அர்த்தமற்றவை” என்று பிரசங்கி கூறுகிறான்.

[3] மனிதனின் எல்லா உழைப்பினாலும் அவன் பெறும் இலாபம் என்ன? சூரியனுக்குக் கீழே அவன் படும் பிரசாயத்தினால் பலன் என்ன?

[4] சந்ததிகள் தோன்றி, சந்ததிகள் மறைகின்றன; ஆனாலும் பூமி மட்டும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கின்றது.

[5] சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; தான் உதிக்கும் இடத்திற்கே அது விரைந்து திரும்பிச் செல்கிறது.

[6] காற்று தெற்கு நோக்கி வீசுகிறது, வடக்கு நோக்கியும் திரும்புகிறது; அது சுழன்று சுழன்று அடித்து, எப்போதும் தான் சுற்றிவந்த இடத்திற்கே திரும்பிச் செல்கிறது.

[7] எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன, ஆனாலும் கடல் ஒருபோதும் நிறைவதில்லை. ஆறுகள் ஊற்றெடுத்த இடத்திற்கே திரும்பிப் போகின்றன.

[8] ஒருவனாலும் சொல்ல முடியாத அளவுக்கு எல்லாக் காரியங்களும் வருத்தத்தையே கொடுக்கின்றன. எவ்வளவு பார்த்தாலும் கண்களுக்கு ஆவல் தீருவதில்லை, எவ்வளவு கேட்டாலும் காதுகள் திருப்தியடைவதில்லை.

[9] இருந்ததே இனிமேலும் இருக்கும், செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே புதிதாக ஒன்றுமேயில்லை.

[10] “பாருங்கள், இது புதிதானது!” என்று யாராவது சொல்லத்தக்கது ஏதாவது ஒன்று உண்டோ? அது நெடுங்காலத்திற்கு முன்பே இங்கு இருந்தது; நமது காலத்திற்கு முன்பும் இங்கு இருந்தது.

[11] முற்காலத்து மனிதரைக் குறித்து ஒருவருக்கும் ஞாபகம் இருப்பதில்லை; அதுபோல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும், பின்வரும் காரியங்களைக்குறித்து ஞாபகம் இருக்காது.

[12] பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன்.

[13] வானத்தின்கீழ் நடைபெறும் எல்லாவற்றையும் ஞானத்தினால் ஆராய்ந்து கண்டுபிடிக்கும்படி என்னை நான் அர்ப்பணித்தேன். மனுக்குலத்தின்மேல் இறைவன் வைத்திருக்கிறது எவ்வளவு பெரிய பாரம்!

[14] சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லா செயல்களையும் நான் பார்த்திருக்கிறேன்; அவை அனைத்தும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.

[15] வளைந்ததை நேராக்கமுடியாது; இல்லாததை எண்ணிக் கணக்கிட முடியாது.

[16] “பாருங்கள், எனக்குமுன் எருசலேமில் ஆளுகை செய்த எல்லோரையும்விட, நான் ஞானத்தில் வளர்ந்து பெருகியிருக்கிறேன்; ஞானத்திலும் அறிவிலும் அதிகமானதை நான் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

[17] பின்பு நான் ஞானத்தை விளங்கிக்கொள்வதற்கும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் விளங்கிக்கொள்ளவும் அதில் முழுமையாய் ஈடுபட்டேன். ஆனால் இதுவும் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே என்று அறிந்துகொண்டேன்.

[18] ஏனெனில் அதிக ஞானத்தினால் அதிக துக்கம் வருகிறது; அதிக அறிவினால் அதிக கவலையும் வருகிறது.

பிரசங்கி — Chapters