Skip to content
Opens in a new window

[1] யோசபாத் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோராம் ராஜாவானான்.

[2] அவனுக்கு யோசபாத்தின் மகன்களாகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர்கள் இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் மகன்கள்.

[3] அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் விலைமதிப்பான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் முதற்பிறந்தவனாக இருந்ததால், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்தான்.

[4] யோராம் தன் தகப்பனுடைய அரசாட்சிக்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர்கள் எல்லோரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.

[5] யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.

[6] அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் மகள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

[7] யெகோவா தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக தாவீதின் வம்சத்தை அழிக்க விருப்பமில்லாமல் இருந்தார்.

[8] அவனுடைய நாட்களில் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

[9] அதனால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவரையும் தோற்கடித்தான்.

[10] ஆகிலும் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் செய்து பிரிந்தார்கள்; அவன் தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள்.

[11] அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிமக்களை வழிவிலகச்செய்து, யூதாவையும் அதற்குத் தூண்டிவிட்டான்.

[12] அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு கடிதம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய முற்பிதாவாகிய தாவீதின் தேவனாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடக்காமல்,

[13] இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் விபசார வழிக்கு ஒப்பாக யூதாவையும் எருசலேமின் குடிமக்களையும் விபசாரம் செய்ய வைத்து, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரர்களையும் கொன்றுபோட்டதால்,

[14] இதோ, யெகோவா உன் மக்களையும், பிள்ளைகளையும், மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையினால் வாதிப்பார்.

[15] நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் அழுகி விழும்வரை கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.

[16] அப்படியே யெகோவா பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.

[17] அவர்கள் யூதாவில் வந்து, வலுக்கட்டாயமாகப் புகுந்து, ராஜாவின் அரண்மனையில் கிடைத்த அனைத்துப் பொருட்களையும், அவனுடைய பிள்ளைகளையும், மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவனுடைய இளைய மகனைத் தவிர வேறொரு மகனையும் அவனுக்கு மீதியாக விடவில்லை.

[18] இவைகள் எல்லாவற்றிற்கும் பிறகு யெகோவா அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.

[19] அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருடங்கள் முடிகிற காலத்தில் அவனுக்கு இருந்த கொடிய நோயினால் அவன் குடல்கள் சரிந்து இறந்துபோனான்; அவனுடைய முற்பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய மக்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.

[20] அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்து, ஒருவராலும் விரும்பப்படாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

2 நாளாகமம் — Chapters