Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:46

[1] யெகோவா மோசேயை நோக்கி:

[2] “எனக்கு நறுமண வாசனையாக, தகனபலிகளுக்குரிய காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படி கவனமாக இருக்கவேண்டும் என்று நீ இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிடு.

[3] மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நிரந்தர சர்வாங்கதகனபலியாக நாள்தோறும் ஒருவயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.

[4] காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,

[5] உணவுபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தவேண்டும்.

[6] இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நிரந்தர சர்வாங்கதகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனைக்கான தகனபலி.

[7] காற்படி திராட்சைரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே யெகோவாவுக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படவேண்டும்.

[8] காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாகச் செலுத்தவேண்டும்.

[9] “ஓய்வுநாளிலோ உணவுபலிக்காக ஒருவயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தவேண்டும்.

[10] எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.

[11] “உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தவேண்டும்.

[12] உணவுபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், உணவுபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,

[13] உணவுபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும்.

[14] அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சைரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாக இருக்கவேண்டும்; இது வருடமுழுவதும் மாதம்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்கதகனபலி.

[15] எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரணபலியாகக் யெகோவாவுக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.

[16] “முதலாம் மாதம் பதினான்காம் தேதி யெகோவாவுக்கு உரிய பஸ்கா.

[17] அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகை நாள்; ஏழு நாட்களளவும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும்.

[18] முதலாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அன்றையதினம் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.

[19] அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,

[20] அவைகளுக்கேற்ற உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,

[21] ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,

[22] உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

[23] காலையிலே எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும் தவிர இவைகளையும் செலுத்தவேண்டும்.

[24] இப்படியாக ஏழுநாட்களளவும் நாள்தோறும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டும்; எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியையும் அதின் பானபலியையும் தவிர, இதையும் செலுத்தவேண்டும்.

[25] ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.

[26] “அந்த வாரங்களுக்குப்பின்பு நீங்கள் யெகோவாவுக்குப் புதிய உணவுபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.

[27] அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,

[28] அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,

[29] ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,

[30] உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

[31] நிரந்தர சர்வாங்கதகனபலியையும் அதின் உணவுபலியையும் அதின் பானபலியையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்; இவைகள் பழுதற்றவைகளாக இருக்கவேண்டும்.

எண்ணாகமம் — Chapters