[1] இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான்.
[2] அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
[3] அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி;
[4] அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்.
[5] அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது.
[6] உடனே பரிசேயர்கள் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யவேண்டும் என்று, அவருக்கு எதிராக ஏரோதியர்களோடு ஆலோசனைபண்ணினார்கள்.
[7] இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குப் போனார்.
[8] கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள். அதோடு தீரு சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்தார்கள்.
[9] அவர் அநேகரைச் சுகமாக்கினார். நோயாளிகளெல்லோரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டும் என்று அவரை நெருங்கிவந்தார்கள்.
[10] மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காமல் இருப்பதற்காக, தமக்கு ஒரு படகை ஆயத்தம் பண்ணவேண்டும் என்று, தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.
[11] அசுத்தஆவிகளும் இயேசுவைப் பார்த்தபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
[12] தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
[13] பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்கு விருப்பமானவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள்.
[14] அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும்,
[15] வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
[16] அவர்கள் யாரென்றால், சீமோன், இவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார்.
[17] செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்,
[18] அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
[19] அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
[20] பின்பு வீட்டிற்குப் போனார்கள்; அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது.
[21] அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
[22] எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்கள்: இவன் பெயெல்செபூலை உடையவனாக இருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
[23] அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
[24] ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே.
[25] ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே.
[26] சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால், அவன் நிலைத்து நிற்கமுடியாமல், அழிந்துபோவானே.
[27] பலசாலியை முதலில் கட்டிப்போடாமல், யாரும் பலசாலியுடைய வீட்டிற்குள் புகுந்து, அவன் பொருட்களைக் கொள்ளையடிக்கமுடியாது; கட்டிப்போட்டால்மட்டுமே, அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்கமுடியும்.
[28] உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
[29] ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார்.
[30] இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார்.
[31] அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
[32] அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
[33] அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி;
[34] தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
[35] தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார்.