Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:34

[1] அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, செல்வந்தர்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்களுடைய காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.

[2] ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:

[3] இந்த ஏழை விதவை மற்றெல்லோரையும்விட அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[4] அவர்களெல்லோரும் தங்களுடைய நிறைவிலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.

[5] பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து சிலர் சொன்னபோது,

[6] அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.

[7] அவர்கள் அவரைப் பார்த்து: போதகரே, இவைகள் எப்பொழுது நடக்கும், இவைகள் நடக்கும் காலத்திற்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.

[8] அதற்கு அவர்: நீங்கள் ஏமாற்றப்படாதபடிக்கு கவனமாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து என் நாமத்தை வைத்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் நெருங்கிவிட்டது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.

[9] சண்டைகளையும் கலவரங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது பயப்படாமலிருங்கள்; இவைகள் முன்னதாக நடக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.

[10] அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: மக்களுக்கு எதிராக மக்களும், தேசத்திற்கு எதிராக தேசமும் எழும்பும்.

[11] பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.

[12] இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் ஆளுனர்கள் முன்பாகவும் உங்களைக் கொண்டுவந்து துன்பப்படுத்துவார்கள்.

[13] ஆனாலும் அது நீங்கள் சாட்சி சொல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

[14] ஆகவே, என்ன பதில் சொல்லுவோமென்று கவலைப்படாமலிருக்கும்படி உங்களுடைய மனதிலே தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.

[15] உங்களுக்கு எதிராக இருக்கிறவர்கள் ஒருவரும் எதிர்த்துப் பேசவும் எதிர்த்து நிற்கவும் முடியாத வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

[16] பெற்றோராலும், சகோதரராலும், சொந்த மக்களாலும், நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.

[17] என் நாமத்தினாலே எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்.

[18] ஆனாலும் உங்களுடைய தலைமுடியில் ஒன்றாவது அழியாது.

[19] உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

[20] எருசலேம் படைவீரர்களால் முற்றுகையிட்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அதின் அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள்.

[21] அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், கிராமத்திலிருக்கிறவர்கள் நகரத்தில் நுழையாமலிருக்கவும் வேண்டும்.

[22] எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.

[23] அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இக்கட்டும் இந்த மக்கள்மேல் தண்டனையும் உண்டாகும்.

[24] வாளால் கொலை செய்யப்பட்டு விழுவார்கள், எல்லா நாடுகளுக்கும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவார்கள்; யூதரல்லாதவர்களின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் யூதரல்லாதவர்களால் மிதிக்கப்படும்.

[25] சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள மக்களுக்குத் தத்தளிப்பும் இக்கட்டும் உண்டாகும்; கடலும் அலைகளும் முழக்கமாக இருக்கும்.

[26] வானத்தின் கோள்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனிதர்களுடைய இருதயம் சோர்ந்துபோகும்.

[27] அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள்.

[28] இவைகள் நடக்கத் தொடங்கும்போது, உங்களுடைய மீட்பு அருகிலிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள் என்றார்.

[29] அன்றியும் அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.

[30] அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் பார்க்கும்போது வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிகிறீர்கள்.

[31] அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, தேவனுடைய ராஜ்யம் நெருங்கிவிட்டதென்று அறியுங்கள்.

[32] இவையெல்லாம் நடப்பதற்குமுன் இந்தச் சந்ததி அழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[33] வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

[34] உங்களுடைய இருதயங்கள் சாப்பாட்டு பிரியத்தினாலும் குடிவெறியினாலும் உலகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினைக்காத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் கவனமாக இருங்கள்.

[35] உலகமெங்கும் குடியிருக்கிற எல்லோர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.

[36] ஆகவே, இனி நடக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனிதகுமாரனுக்குமுன்பாக நிற்கத் தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்செய்து விழித்திருங்கள் என்றார்.

[37] அவர் பகல் நேரங்களில் தேவாலயத்திலே போதகம் செய்துகொண்டும், இரவு நேரங்களில் வெளியேபோய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

[38] மக்களெல்லோரும் அவருடைய போதகத்தைக் கேட்பதற்காக அதிகாலமே தேவாலயத்திற்கு வருவார்கள்.

லூக்கா — Chapters