Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:21

[1] ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.

[2] அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.

[3] அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.

[4] என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

[5] அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.

[6] ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார்.

[7] நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கை கடினமாக்கினார்.

[8] நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார்.

[9] வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

[10] அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.

[11] என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.

[12] தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

[13] தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.

[14] நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன்.

[15] கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார்.

[16] அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.

[17] என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.

[18] என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.

[19] எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.

[20] என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.

[21] இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.

[22] நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

[23] அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

[24] யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.

[25] தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர்.

[26] யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

[27] தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.

[28] அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.

[29] நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக.

[30] தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.

[31] ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

[32] அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.

[33] அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.

[34] ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,

[35] உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,

[36] மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?

[37] ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

[38] உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?

[39] உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

[40] நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.

[41] நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக.

[42] நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.

[43] தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.

[44] ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.

[45] மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.

[46] எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள்.

[47] பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது.

[48] மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.

[49] யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை,

[50] என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.

[51] என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது.

[52] காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.

[53] படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள்.

[54] தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.

[55] மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.

[56] என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.

[57] நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர்.

[58] ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.

[59] யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும்.

[60] அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.

[61] யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,

[62] எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.

[63] அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.

[64] யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.

[65] அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.

[66] கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.

புலம்பல் — Chapters