Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:52

[1] லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற மகளாகிய தீனாள், தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.

[2] அவளை ஏவியனான ஏமோரின் மகனும் அந்த தேசத்தின் இளவரசனுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடு உறவுகொண்டு, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

[3] அவனுடைய மனம், யாக்கோபின் மகளாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அவளுடைய மனதிற்கு இன்பமாகப் பேசினான்.

[4] சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: “இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும்” என்று சொன்னான்.

[5] தன் மகளாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவனுடைய மகன்கள் அவனுடைய மந்தையினிடத்தில் வயல்வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வரும்வரைக்கும் யாக்கோபு பேசாமலிருந்தான்.

[6] அந்தநேரத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடு பேசும்படி அவனிடத்திற்கு வந்தான்.

[7] யாக்கோபின் மகன்கள் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வயல்வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் மகளோடு உறவுகொண்டு, செய்யத்தகாத புத்திகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர்கள் மனம்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.

[8] ஏமோர் அவர்களோடு பேசி: “என் மகனாகிய சீகேமின் மனது உங்கள் மகளின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.

[9] நீங்கள் எங்களோடு சம்பந்தங்கலந்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் மகள்களை உங்களுக்குக் கொண்டு,

[10] எங்களோடு குடியிருங்கள்; தேசம் உங்களுக்கு முன்பாக இருக்கிறது; இதில் குடியிருந்து, வியாபாரம்செய்து, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள்” என்றான்.

[11] சீகேமும், அவளுடைய தகப்பனையும், சகோதரர்களையும் நோக்கி: “உங்களுடைய கண்களில் எனக்கு தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;

[12] பெண்ணுக்குக் கொடுக்கவேண்டியவைகளையும் வெகுமதிகளையும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும்” என்றான்.

[13] அப்பொழுது யாக்கோபின் மகன்கள் தங்கள் சகோதரியாகிய தீனாளை சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினதால், அவனுக்கும் அவனுடைய தகப்பனாகிய ஏமோருக்கும் தந்திரமான மறுமொழியாக:

[14] “விருத்தசேதனமில்லாத மனிதனுக்கு நாங்கள் எங்களுடைய சகோதரியைக் கொடுக்கமுடியாது; அது எங்களுக்கு அவமானமாயிருக்கும்.

[15] நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டு எங்களைப்போல் ஆவீர்களானால், நாங்கள் சம்மதித்து,

[16] உங்களுக்கு எங்கள் மகள்களைக் கொடுத்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொண்டு, உங்களோடு குடியிருந்து, ஒரே ஜனமாக இருப்போம்.

[17] விருத்தசேதனம் செய்துகொள்வதற்கு சம்மதிக்கவில்லை என்றால், நாங்கள் எங்களுடைய மகளை அழைத்துக்கொண்டு போய்விடுவோம்” என்று சொன்னார்கள்.

[18] அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் மகனாகிய சீகேமுக்கும் நன்றாகத் தோன்றியது.

[19] அந்த வாலிபன் யாக்கோபுடைய மகளின்மேல் பிரியம் வைத்திருந்ததால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்செய்யவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாக இருந்தான்.

[20] ஏமோரும் அவனுடைய மகன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதர்களுடன் பேசி:

[21] “இந்த மனிதர் நம்முடன் சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகவே, அவர்கள் இந்தத் தேசத்தில் குடியிருந்து, இதிலே வியாபாரம் செய்யட்டும்; அவர்களும் குடியிருக்கிறதற்கு தேசம் விசாலமாக இருக்கிறது; அவர்களுடைய மகள்களை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய மகள்களை அவர்களுக்குக் கொடுப்போம்.

[22] அந்த மனிதர் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடு குடியிருக்கச் சம்மதிப்பார்கள்.

[23] அவர்களுடைய ஆடுமாடுகள், சொத்துக்கள், மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே குடியிருப்பார்கள்” என்று சொன்னார்கள்.

[24] அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவனுடைய சொல்லையும், அவனுடைய மகனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.

[25] மூன்றாம் நாளில் அவர்களுக்கு வலி அதிகமானபோது, யாக்கோபின் மகன்களும் தீனாளின் சகோதரர்களுமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டுபேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாகப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் அனைவரையும் கொன்றுபோட்டார்கள்.

[26] ஏமோரையும், அவனுடைய மகன் சீகேமையும் பட்டயத்தால் கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

[27] மேலும், யாக்கோபின் மற்ற மகன்கள் வெட்டப்பட்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,

[28] அவர்களுடைய ஆடுமாடுகளையும், கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் அனைத்தையும்,

[29] அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் பெண்களையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.

[30] அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: “இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கச்செய்தீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாக ஒன்றுசேர்ந்து, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே” என்றான்.

[31] அதற்கு அவர்கள்: “எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ” என்றார்கள்.

ஆதியாகமம் — Chapters