Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:45

[1] அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: யெகோவாவைப் பாடுவேன்; “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

[2] யெகோவா என்னுடைய பெலனும் என்னுடைய கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என்னுடைய தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்செய்வேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

[3] யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; என்பது யெகோவா அவருடைய நாமம்.

[4] பார்வோனின் இரதங்களையும் அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; அவனுடைய முதன்மையான அதிகாரிகள் செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள்.

[5] ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.

[6] யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது.

[7] உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது.

[8] உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது.

[9] தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், என்னுடைய பட்டயத்தை உருவுவேன், என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான்.

[10] உம்முடைய காற்றை வீசச்செய்தீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.

[11] யெகோவாவே, தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

[12] நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.

[13] நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர்.

[14] மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும்.

[15] ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பலசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானில் குடியிருப்பவர்கள் யாவரும் கரைந்துபோவார்கள்.

[16] பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள்.

[17] நீர் அவர்களைக் கொண்டுபோய், யெகோவாவாகிய தேவரீர் தங்குவதற்கு நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.

[18] யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.

[19] பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது; யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்; இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள்.

[20] ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

[21] மிரியாம் அவர்களுக்குப் பதிலாக: யெகோவாவைப் பாடுங்கள், அவர் மகிமையாக வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.

[22] பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்.

[23] அவர்கள் மாராவிற்கு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.

[24] அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.

[25] மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:

[26] நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார்.

[27] பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.

யாத்திராகமம் — Chapters