Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:50

[1] “உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல் இருக்காமல், அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.

[2] உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவரும்வரை உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.

[3] அப்படியே அவனுடைய கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் உடையைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன் போல் விட்டுப்போகக்கூடாது.

[4] “உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனுடன்கூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.

[5] “ஆண்களின் உடைகளை பெண்கள் அணியக்கூடாது, பெண்களின் உடைகளை ஆண்கள் அணியக்கூடாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.

[6] “வழியருகே ஒரு மரத்திலோ தரையிலோ குஞ்சுகளாவது முட்டைகளாவது உள்ள ஒரு குருவிக்கூட்டை நீ பார்க்கும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளுடன் தாயையும் பிடிக்கக்கூடாது.

[7] தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.

[8] “நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் அதன் மாடியிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாமலிருக்க, அதற்குக் கைப்பிடிச் சுவரைக் கட்டவேண்டும்.

[9] “உன் திராட்சைத்தோட்டத்திலே பலவிதமான விதையை விதைக்காதே; இப்படிச் செய்தால் நீ விதைத்த விதைகளின் பயிரையும், திராட்சைத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.

[10] மாட்டையும், கழுதையையும் இணைத்து உழாதிருப்பாயாக.

[11] ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே.

[12] “நீ அணிந்துகொள்கிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டாக்குவாயாக.

[13] “ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து:

[14] நான் இந்தப் பெண்ணைத் திருமணம்செய்து, அவளிடத்தில் உறவுகொண்டபோது கன்னித்தன்மையைக் காணவில்லை என்று அவள் மேல் குற்றம் சுமத்தி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;

[15] அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.

[16] அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,

[17] நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள்.

[18] அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,

[19] அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுசெய்ததால், அவன் கையிலிருந்து நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தான் உயிருள்ளவரை அவளைத் தள்ளிவிடக்கூடாது.

[20] அந்தப் பெண்ணிடத்தில் கன்னித்தன்மை காணப்படவில்லையென்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்,

[21] அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டில் வேசித்தனம்செய்ததால், அவளுடைய பட்டணத்து மனிதர்கள் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

[22] “ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக.

[23] “கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால்,

[24] அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

[25] “ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளுடன் உறவுகொண்டானேயாகில், அவளுடன் உறவுகொண்ட மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.

[26] பெண்ணுக்கு ஒன்றும் செய்யக்கூடாது; பெண்ணின்மேல் மரணத்திற்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனைக் கொன்றதுபோல இருக்கிறது.

[27] வெளியிலே அவன் அவளைக் கண்டான்; நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் அச்சமயத்தில் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுபவர் இல்லாமற்போனது.

[28] “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,

[29] அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

[30] “ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியுடன் உறவுகொள்ளக்கூடாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தக்கூடாது.

உபாகமம் — Chapters