Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:22

[1] பெண்களுள் பேரழகியே, உன் காதலர் எங்கே போய்விட்டார்? உன் காதலர் எப்பக்கம் திரும்பிப்போனார்? சொன்னால் உன்னோடு சேர்ந்து நாங்களும் அவரைத் தேடுவோம்.

[2] என் காதலர் தோட்டங்களில் மேய்வதற்கும், லில்லிப் பூக்களைச் சேர்ப்பதற்கும், நறுமணச்செடிகளின் பாத்திகளுக்கும் போயிருக்கிறார்.

[3] நான் என் காதலருக்குரியவள், என் காதலர் என்னுடையவர்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.

[4] என் அன்பே, நீ திர்சா பட்டணத்தைப்போல அழகானவள், எருசலேமைப்போல வசீகரமானவள், கொடிகள் ஏந்தும் படைகளைப்போல கம்பீரமானவள்.

[5] உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு; அவை என்னை மயக்குகின்றன. உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தையைப் போன்றது.

[6] உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, அவற்றில் எதுவும் மலடாய் அல்ல.

[7] உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை.

[8] அறுபது அரசிகளும், எண்பது வைப்பாட்டிகளும்; கணக்கிடமுடியாத கன்னிப்பெண்களும் இருக்கலாம்.

[9] ஆனால் என் புறாவோ, என் உத்தமியோ ஈடு இணையற்றவள், அவள் தன் தாய்க்கு ஒரே மகள், அவள் அவளைப் பெற்றவளுக்குச் செல்லப்பிள்ளை. கன்னிப்பெண்கள் அவளைக் கண்டு வாழ்த்தினார்கள்; அரசிகளும் வைப்பாட்டிகளும் அவளைப் புகழ்ந்தார்கள்.

[10] சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும், அணிவகுத்து நிற்கும் நட்சத்திரங்களைப்போல் கம்பீரமானவளாயும் அதிகாலையைப்போல் தோன்றுகிற இவள் யார்?

[11] பள்ளத்தாக்கின் புதுத் தளிர்களைப் பார்க்கவும், திராட்சைக்கொடிகள் மொட்டு விட்டிருக்கின்றனவா என்று பார்க்கவும், மாதுளை மரங்கள் பூத்திருக்கின்றனவா என்று பார்க்கவும் நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.

[12] நான் புரிந்துகொள்ளும் முன்னமே, என் ஆசை என்னை என் மக்களின் அரச தேர்களுக்கு அழைத்துச் சென்றது.

[13] திரும்பி வா, திரும்பி வா, சூலமித்தியே, நாங்கள் உன்னை நன்றாய்ப் பார்க்கும்படி திரும்பி வா, திரும்பி வா! இரண்டு அணிகளின் நடனங்களைப் பார்ப்பதுபோல், நீங்கள் ஏன் சூலமித்தியை உற்றுப் பார்க்கிறீர்கள்?

உன்னதப்பாட்டு — Chapters