Skip to content
Opens in a new window
Listen to this chapter • 10:42

[1] கொள்ளைநோய் நீங்கியபின் யெகோவா மோசேயிடமும் ஆரோனின் மகனான ஆசாரியன் எலெயாசாரிடமும் கூறியதாவது,

[2] “நீங்கள் முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் குடும்பம் குடும்பமாக குடிமதிப்பிடுங்கள். இஸ்ரயேலின் இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களைக் கணக்கிடுங்கள்” என்றார்.

[3] எனவே மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் யோர்தானுக்கு அருகே, எரிகோவுக்கு எதிராகவுள்ள மோவாப் சமவெளியில் அவர்களுடன் பேசினார்கள்.

[4] “யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி உங்களில் இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களைக் குடிமதிப்பிடுங்கள்” என்றார்கள். எகிப்திலிருந்து வெளியேவந்த இஸ்ரயேலர் இவர்களே:

[5] இஸ்ரயேலின் மூத்த மகனான ரூபனின் சந்ததிகளாவன, ஆனோக் மூலமாக ஆனோக்கிய வம்சமும், பல்லூ மூலமாக பல்லூவிய வம்சமும் வந்தன.

[6] எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும், கர்மீயின் மூலமாக கர்மீய வம்சமும் வந்தன.

[7] ரூபனின் வம்சங்கள் இவைகளே: 43,730 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[8] பல்லூவின் மகன் எலியாப்,

[9] எலியாபின் மகன்கள் நெமுயேல், தாத்தான், அபிராம் என்பவர்கள். இஸ்ரயேல் சமுதாயத்திற்கு அதிகாரிகளாயிருந்த தாத்தானும் அபிராமுமே மோசேயையும் ஆரோனையும் எதிர்த்துக் கலகம் பண்ணினார்கள். கோராகைப் பின்பற்றியவர்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணியபோது இவர்களும் அவர்களோடிருந்தார்கள்.

[10] பூமி பிளவுண்டு கோராகுடன் சேர்த்து அவர்களை விழுங்கிப்போட்டது. நெருப்பு 250 பேரை சுட்டெரித்தபோது, கோராகைப் பின்பற்றியவர்களும் செத்தார்கள். அந்த நிகழ்ச்சி இஸ்ரயேலுக்கு ஒரு எச்சரிப்பின் அடையாளமாய் இருந்தது.

[11] ஆனாலும், கோராகின் சந்ததிகள் எல்லோருமே சாகவில்லை.

[12] வம்சம் வம்சமாக சிமியோனின் சந்ததிகளாவன. நெமுயேல் மூலமாக நெமுயேலின் வம்சமும், யாமின் மூலமாக யாமினிய வம்சமும், யாகீன் மூலமாக யாகீனிய வம்சமும் வந்தன.

[13] சேராகின் மூலமாக சேராகிய வம்சமும், சாவூலின் மூலமாக சாவூலிய வம்சமும் வந்தன.

[14] சிமியோனின் வம்சங்கள் இவையே. 22,200 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[15] வம்சம் வம்சமாக காத்தின் சந்ததிகளாவன: சிப்போனின் மூலமாக சிப்போனிய வம்சமும், அகியின் மூலமாக அகியரின் வம்சமும், சூனியின் மூலமாக சூனியரின் வம்சமும் வந்தன.

[16] ஒஸ்னியின் மூலமாக ஒஸ்னிய வம்சமும், ஏரியின் மூலமாக ஏரிய வம்சமும் வந்தன.

[17] ஆரோதியின் மூலமாக ஆரோதிய வம்சமும், அரேலியின் மூலமாக அரேலிய வம்சமும் வந்தன.

[18] காத்தின் வம்சங்கள் இவையே. 40,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[19] ஏர், ஓனான் ஆகியோர் யூதாவின் மகன்கள். ஆனால் அவர்கள் கானான் நாட்டில் இறந்துபோனார்கள்.

[20] வம்சம் வம்சமாக யூதாவின் சந்ததிகளாவன: சேலாவின் மூலமாக சேலாவிய வம்சமும், பாரேஸின் மூலமாக பாரேஸிய வம்சமும், சேராவின் மூலமாக, சேராவிய வம்சமும் வந்தன.

[21] பாரேஸின் சந்ததிகளாவன: எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும், ஆமூலின் மூலமாக ஆமூலிய வம்சமும் வந்தன.

[22] யூதாவின் வம்சங்கள் இவையே. 76,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[23] வம்சம் வம்சமாக இசக்காரின் சந்ததிகளாவன: தோலாவின் மூலமாக தோலாவிய வம்சமும், பூவாவின் மூலமாக பூவாவிய வம்சமும் உண்டாயின.

[24] யாசூபின் மூலமாக யாசூபிய வம்சமும், சிம்ரோனின் மூலமாக சிம்ரோனிய வம்சமும் உண்டாயின.

[25] இசக்காரின் வம்சங்கள் இவையே. 64,300 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[26] வம்சம் வம்சமாக செபுலோன் சந்ததிகளாவன: சேரேத்தின் மூலமாக செரேத்திய வம்சமும், ஏலோனின் மூலமாக ஏலோனிய வம்சமும், யாலயேலின் மூலமாக யாலயேலிய வம்சமும் வந்தன.

[27] செபுலோனின் வம்சங்கள் இவையே. 60,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[28] வம்சம் வம்சமாக மனாசே, எப்பிராயீம் வழியாக வந்த யோசேப்பின் சந்ததிகளாவன:

[29] மனாசேயின் சந்ததிகள்: மாக்கீரின் மூலமாக மாகீரிய வம்சம் வந்தது. மாகீர், கீலேயாத்தின் தகப்பன் கீலேயாத்தின் வழியாக கீலேயாத்திய வம்சம் வந்தது.

[30] கீலேயாத்தின் சந்ததிகளாவன: ஈயேசேரின் மூலமாக ஈயேசேரியரின் வம்சமும், ஏலேக்கின் மூலமாக ஏலேக்கிய வம்சமும் வந்தன.

[31] அஸ்ரியேலின் மூலமாக அஸ்ரியேலிய வம்சமும், சீகேமின் மூலமாக சீகேமிய வம்சமும் வந்தன.

[32] செமிதாவின் மூலமாக செமிதாவிய வம்சமும், எப்பேரின் மூலமாக ஏப்பேரிய வம்சமும் வந்தன.

[33] எப்பேரின் மகனான செலொப்பியாத்திற்கு மகன்கள் இருக்கவில்லை. அவனுக்கு மகள்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பனவாகும்.

[34] மனாசேயின் வம்சங்கள் இவைகளே: 52,700 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[35] வம்சம் வம்சமாக எப்பிராயீம் சந்ததிகளாவன: சுத்தெலாகின் மூலமாக சுத்தெலாகிய வம்சமும், பெகேரின் மூலமாக பெகேரிய வம்சமும், தாகானின் மூலமாக தாகானிய வம்சமும் வந்தன.

[36] சுத்தெலாதின் சந்ததிகளாவன: ஏரானின் மூலமாக ஏரானிய வம்சம் வந்தது.

[37] எப்பிராயீமின் வம்சங்கள் இவைகளே. 32,500 பேர் அவர்களில் எண்ணப்பட்டார்கள். வம்சம் வம்சமாக இவர்கள் யோசேப்பின் சந்ததிகளாவர்.

[38] வம்சம் வம்சமாக பென்யமீன் சந்ததிகளாவன: பேலாவின் மூலமாக பேலாவிய வம்சமும், அஸ்பேலின் மூலமாக அஸ்பேலின் வம்சமும், அகிராமின் மூலமாக அகிராமிய வம்சமும் வந்தன.

[39] சுப்பாமின் மூலமாக சுப்பாமிய வம்சமும், உப்பாமின் மூலமாக உப்பாமிய வம்சமும் வந்தன.

[40] ஆர்த், நாகமான் மூலமாக வந்த பேலாவின் சந்ததிகளாவன: ஆரேதின் மூலமாக ஆரேதிய வம்சமும், நாகமானின் மூலமாக நாகமானிய வம்சமும் வந்தன.

[41] பென்யமீனின் வம்சங்கள் இவையே: 45,600 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[42] வம்சம் வம்சமாக தாணின் சந்ததிகளாவன: சூகாமின் மூலமாக சூகாமிய வம்சம் உண்டாயிற்று. தாணின் வம்சங்களாவன;

[43] அவர்கள் அனைவரும் சூகாமிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். 64,400 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[44] வம்சம் வம்சமாக ஆசேரின் சந்ததிகளாவன: இம்னாவின் மூலமாக இம்னாவிய வம்சமும்; இஸ்வியின் மூலமாக இஸ்விய வம்சமும்; பெரீயாவின் மூலமாக பெரீயாவிய வம்சமும் வந்தன;

[45] பெரீயா சந்ததியின் மூலமாக வந்தவர்கள்: ஏபேரின் மூலமாக ஏபேரிய வம்சமும், மல்கியேலின் மூலமாக மல்கியேலிய வம்சமும் வந்தன.

[46] ஆசேருக்கு செராக்கு என்னும் பெயருள்ள ஒரு மகள் இருந்தாள்.

[47] ஆசேரின் வம்சங்கள் இவைகளே: 53,400 பேர். அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[48] வம்சம் வம்சமாக நப்தலியின் சந்ததிகளாவன: யாத்சியேலின் மூலமாக யாத்சியேலிய வம்சமும்; கூனியின் மூலமாக கூனியரின் சந்ததியும் வந்தன;

[49] எத்செரின் மூலமாக எத்சேரிய வம்சமும், சில்லேமின் மூலமாக சில்லேமிய வம்சமும் உண்டாயின.

[50] நப்தலியின் வம்சங்கள் இவையே. 45,400 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.

[51] இஸ்ரயேலிய மனிதர்களின் மொத்த எண்ணிக்கை 6,01,730 பேர்.

[52] யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:

[53] “பெயர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடு அவர்களுக்கு உரிமைச்சொத்தாகப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

[54] கணக்கிடப்பட்டவர்களில் பெரிய குழுவினருக்கு பெரிதான உரிமைச்சொத்தும், சிறிய குழுவிற்குச் சிறிதான உரிமைச்சொத்தும் கொடு. கணக்கிடப்பட்டவர்களின் எண்ணிக்கையின்படியே ஒவ்வொரு குழுவும் உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

[55] சீட்டுப்போடுவதன் மூலமே நாடு பங்கிடப்படவேண்டும் என்பதில் கவனமாயிரு. ஒவ்வொரு குழுவும் உரிமையாக்கிக்கொள்ளும் நிலம் அவர்களின் முற்பிதாக்களின் கோத்திரப் பெயர்களின் எண்ணிக்கைப்படியே இருக்கவேண்டும்.

[56] ஒவ்வொரு உரிமைச்சொத்து நிலமும் பெரிய குழுக்களுக்குள்ளும், சிறிய குழுக்களுக்குள்ளும் சீட்டுப்போட்டே பங்கிடப்படவேண்டும்” என்றார்.

[57] வம்சம் வம்சமாக எண்ணப்பட்ட லேவியர்கள் இவர்களே. கெர்சோனின் மூலமாக கெர்சோனிய வம்சமும், கோகாத்தின் மூலமாக கோகாத்திய வம்சமும், மெராரியின் மூலமாக மெராரிய வம்சமும் வந்தன.

[58] லேவியின் மற்ற வம்சங்களாவன: லிப்னீய வம்சம், எப்ரோனிய வம்சம், மகலிய வம்சம், மூசிய வம்சம், கோராகிய வம்சம் என்பவைகளே. அம்ராமின் முற்பிதா கோகாத்;

[59] அம்ராமின் மனைவியின் பெயர் யோகெபேத். அவள் லேவிய சந்ததியைச் சேர்ந்தவள். அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்தவள். அவள், ஆரோன், மோசே ஆகியோரையும் அவர்களின் சகோதரியான மிரியாமையும் அம்ராமுக்குப் பெற்றாள்.

[60] நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரின் தகப்பன் ஆரோன்.

[61] நாதாபும், அபியூவும் அங்கீகரிக்கப்படாத நெருப்பினால் யெகோவாவுக்கு முன்பாகக் காணிக்கையைச் செலுத்தியபோது இறந்துபோனார்கள்.

[62] கணக்கிடப்பட்டபடி, ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களான லேவிய ஆசாரியர்களின் மொத்தத்தொகை 23,000 பேர். இவர்களுக்கு மற்ற இஸ்ரயேலருக்குள் உரிமைச்சொத்து கிடைக்காதபடியால், லேவியர் அவர்களுடன் சேர்த்து எண்ணப்படவில்லை.

[63] யோர்தானுக்கு அருகே எரிகோவுக்கு எதிராகவுள்ள மோவாப் சமவெளியில் மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் இஸ்ரயேலரைக் கணக்கெடுத்தபோது கணக்கிடப்பட்டவர்கள் இவர்களே.

[64] ஆனால் முன்பு மோசேயினாலும், ஆசாரியன் ஆரோனாலும் சீனாய் வனாந்திரத்தில் கணக்கிடப்பட்ட இஸ்ரயேலர்களில் ஒருவனும் இவர்கள் மத்தியில் இருக்கவில்லை.

[65] ஏனெனில், “அந்த இஸ்ரயேலர் பாலைவனத்தில் நிச்சயம் சாவார்கள்” என யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தார். அவ்வாறே எப்புன்னேயின் மகன் காலேபையும், நூனின் மகன் யோசுவாவையும் தவிர வேறு ஒருவரும் உயிரோடிருக்கவில்லை.

எண்ணாகமம் — Chapters