[1] மீண்டும் இயேசு கடற்கரையினில் போதிக்கத் தொடங்கினார். அவரிடத்தில் மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டிருந்தபடியால், இயேசு கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் ஏறி அதில் உட்கார்ந்தார்; மக்களோ கடற்கரை ஓரமாய் நின்றார்கள்.
[2] இயேசு பல காரியங்களை, உவமைகள் மூலம் அவர்களுக்கு போதித்தார். அவர் தமது போதனையில் அவர்களுக்கு இதைச் சொன்னார்:
[3] “கேளுங்கள்! ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான்.
[4] அவன் விதைகளைத் விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.
[5] சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததினால், அது விரைவாக முளைத்தாலும்.
[6] வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின.
[7] வேறுசில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன; முட்செடி வளர்ந்து, பயிர்களை நெருக்கிப் போட்டது. அதனால், அவைகள் விளைச்சலைக் கொடுக்கவில்லை.
[8] வேறுசில விதைகளோ நல்ல மண்ணில் விழுந்தன; அவை முளைவிட்டு வளர்ந்து முப்பதும், அறுபதும், நூறு மடங்கானதுமாக விளைச்சலைக் கொடுத்தன.”
[9] பின்பு இயேசு அவர்களுக்கு, “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
[10] அவர் தனிமையாய் இருந்தபோது, அந்த பன்னிரண்டு பேரும் அவருடன் இருந்த மற்றவர்களும் அந்த உவமையைப் பற்றிய விளக்கத்தைக் கேட்டார்கள்.
[11] இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசின் இரகசியம் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது; ஆனால், வெளியில் இருக்கிறவர்களுக்கோ, எல்லா காரியங்களும் உவமைகள் மூலமாகவே சொல்லப்படுகின்றன.
[12] இதனால், “ ‘அவர்கள் எப்பொழுதும் கண்டும், ஒருபோதும் அறிந்துகொள்ளாமலும், கேட்டும் ஒருபோதும் விளங்கிக்கொள்ளமாட்டார்கள்; இல்லாவிட்டால், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்’ ” என்றார்.
[13] மேலும் இயேசு அவர்களிடம், “இந்த உவமை உங்களுக்கு விளங்கவில்லையா? அப்படியானால், மற்ற உவமைகளையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வீர்கள்?” என்று கேட்டார்.
[14] “விவசாயி வார்த்தையை விதைக்கிறான்.
[15] சிலர் பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதை போன்றவர்கள். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன், சாத்தான் வந்து அவர்களில் விதைக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்துப் போடுகிறான்.
[16] மற்றவர்களோ, கற்பாறையான இடங்களில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்.
[17] ஆனால் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விசுவாசத்திலிருந்து விழுந்து போகிறார்கள்.
[18] வேறுசிலரோ, முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டும்,
[19] இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது.
[20] வேறுசிலரோ, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு சிலர் முப்பதும், அறுபதும், நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுக்கிறார்கள்” என்றார்.
[21] மேலும் இயேசு அவர்களிடம், “ஒரு விளக்கைக் கொண்டுவருவது, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ மறைத்துவைக்கிறதற்கா? அதை விளக்குத்தண்டின் மேல் வைக்கிறதற்கு அல்லவா?
[22] வெளிப்படாமல் மறைத்திருப்பது ஒன்றுமில்லை, வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.
[23] கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
[24] இயேசு தொடர்ந்து: “நீங்கள் கேட்பதைக் கவனமாய் யோசியுங்கள். எந்த அளவையை நீங்கள் உபயோகிக்கிறீர்களோ, அந்த அளவையினாலேயே உங்களுக்கும் அளக்கப்படும். கேட்கிற உங்களுக்கு அதிகமாகவும் கொடுக்கப்படும்.
[25] இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
[26] மேலும் இயேசு சொன்னார்: “இறைவனுடைய அரசு ஒருவர் விதைகளை நிலத்தில் விதைக்கிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
[27] அவன் இரவும் பகலும் தூங்கியும் விழித்தும் இருக்கையில் அந்த விதை முளைவிட்டு வளர்கிறது; அது எப்படியென்று அவனுக்குத் தெரியாது.
[28] மண் தானாகவே தானியத்தை, முதலில் பயிரையும் பின்பு கதிரையும் அதற்குப் பின்பு கதிரிலே நிறைந்த தானியத்தையும் அது கொடுக்கிறது.
[29] பயிர் விளைந்தவுடனே, அறுவடை வந்துவிட்டதென்று விதைத்தவன் அதன்மேல் அரிவாளை போடுகிறான்” என்றார்.
[30] மீண்டும் இயேசு, “இறைவனுடைய அரசை, நாம் எதற்கு ஒப்பிட்டுச் சொல்வோம், எந்த உவமையினால் அதை விவரித்துக் கூறுவோம்?
[31] அது கடுகுவிதையைப் போன்றது. அது பூமியிலுள்ள எல்லா விதைகளிலும் சிறியதாக இருக்கிறது.
[32] ஆகிலும் அது விதைக்கப்படும்போது முளைத்து, தோட்டத்திலுள்ள மற்ற எல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்கிறது. ஆகாயத்துப் பறவைகள் அதன் நிழலில் வந்து தங்கக்கூடிய அளவுக்குப் பெரியதான கிளைகளையும் விடுகிறது” என்றார்.
[33] மக்கள் கேட்டு விளங்கக்கூடிய அளவுக்கு, இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலம், அவர்களுக்கு வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தார்.
[34] உவமைகளின் மூலமே அல்லாமல், இயேசு அவர்களுடன் எதையுமே பேசவில்லை. ஆனால் அவர் தம்முடைய சீடர்களுடன் தனித்திருந்தபோது, அவர்களுக்கு எல்லாவற்றையும் தெளிவாக்கினார்.
[35] அன்று மாலை வேளையானபோது, இயேசு தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார்.
[36] அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, இயேசுவை அவர் படகில் இருந்த வண்ணமாகவே, தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.
[37] அப்பொழுது பலத்த புயல்காற்று உண்டாகி, அலைகள் படகின்மேல் மோதின; படகு மூழ்கத்தொடங்கியது.
[38] இயேசுவோ படகின் பின்பகுதியில் ஒரு தலையணை வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் அவரை எழுப்பி அவரிடம், “போதகரே! நாங்கள் மூழ்கப்போவதைப் பற்றி, உமக்குக் கவலையில்லையா!” எனக் கேட்டார்கள்.
[39] இயேசு விழித்தெழுந்து, காற்றைக் கடிந்துகொண்டார்; அலைகளிடம், “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்பொழுது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று.
[40] இயேசு தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார்.
[41] அவர்கள் பயமடைந்து ஒருவரோடொருவர், “இவர் யார்? காற்றும், அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே?” என்று பேசிக்கொண்டார்கள்.