Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:39

[1] பஸ்கா என்ற பண்டிகை தொடங்க இருந்தது. இயேசு தாம் இந்த உலகத்தை விட்டுப் புறப்பட்டு பிதாவினிடத்திற்கு போகும்வேளை நெருங்கி விட்டதை அறிந்திருந்தார். உலகத்திலே தமக்கு உரியவர்களுக்கு அன்புகாட்டிய அவர், இப்பொழுது தமது அன்பின் முழுமையையும் காட்டினார்.

[2] இரவு உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி, சீமோனின் மகனாகிய யூதாஸ் ஸ்காரியோத்தை ஏற்கெனவே சாத்தான் உள்ளத்தில் ஏவிவிட்டிருந்தான்.

[3] பிதா எல்லாவற்றையும் தமது வல்லமையின்கீழ் ஒப்புக்கொடுத்திருந்ததையும், தான் இறைவனிடத்திலிருந்து வந்ததையும், இறைவனிடத்திற்கே திரும்பிப் போகிறதையும் இயேசு அறிந்திருந்தார்.

[4] எனவே அவர் உணவுப் பந்தியிலிருந்து எழுந்து தமது மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு சால்வையை எடுத்து இடுப்பிலேக் கட்டிக் கொண்டார்.

[5] அதற்குப் பின்பு, அவர் ஒரு பாத்திரத்திலே தண்ணீரை ஊற்றி, தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவினார். பின் தம்முடைய இடுப்பிலே கட்டியிருந்தச் சால்வையினால் அவர்களுடைய கால்களைத் துடைக்கத் தொடங்கினார்.

[6] இயேசு சீமோன் பேதுருவிடம் வந்தபோது, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா?” என்றான்.

[7] இயேசு அதற்குப் பதிலாக, “நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது புரியாது, பின்பு நீ புரிந்துகொள்வாய்” என்றார்.

[8] அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார்.

[9] அப்பொழுது சீமோன் பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களை மாத்திரமல்ல, என்னுடைய கைகளையும் என்னுடைய தலையையுங்கூட கழுவும்!” என்றான்.

[10] அதற்கு இயேசுவோ, “குளித்தவன் தன் கால்களை மாத்திரமே கழுவ வேண்டியவனாயிருக்கிறான்; மற்றப்படி அவனுடைய முழு உடலும் சுத்தமாயிருக்கிறது. நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் அல்ல” என்றார்.

[11] ஏனெனில் தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யார் என்று அவர் அறிந்திருந்தார். அதனாலேயே, “நீங்கள் எல்லோரும் சுத்தமானவர்கள் அல்ல” என்று சொன்னார்.

[12] அவர்களுடைய கால்களைக் கழுவி முடித்தபின்பு, இயேசு தம்முடைய உடையை உடுத்தி கொண்டு, மீண்டும் தமக்குரிய இடத்தில் உட்கார்ந்தார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா?” என்று கேட்டார்.

[13] மேலும் அவர், “நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும், ‘கர்த்தர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அப்படி அழைப்பது சரியே. ஏனெனில் நான் அவர்தான்.

[14] அப்படியே கர்த்தரும் போதகருமாயிருக்கிற நானே உங்கள் கால்களைக் கழுவியிருக்கிறேன். நீங்களும்கூட ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவவேண்டும்.

[15] ஏனெனில் நான் உங்களுக்குச் செய்ததுபோலவே, நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்திருக்கிறேன்.

[16] மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எந்த வேலையாளும் தன்னுடைய எஜமானைவிடப் பெரியவன் அல்ல. எந்தத் தூதனும் தன்னை அனுப்பியவனைவிடப் பெரியவன் அல்ல.

[17] நீங்கள் இப்போது இவைகளை அறிந்திருக்கிறீர்கள். அப்படியே நீங்கள் இவைகளைச் செய்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்” என்றார்.

[18] இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நான் உங்கள் எல்லோரைக் குறித்தும் பேசவில்லை; நான் எவர்களைத் தெரிந்துகொண்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் ‘என்னோடு உணவு உண்டவனே எனக்கு விரோதமாய் இருக்கிறான்’ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.

[19] “அது நிகழும் முன்பதாகவே இப்போது நான் அதை உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அது நிகழும்போது, நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள்.

[20] மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் அனுப்புகிற எவனையாவது ஒருவன் ஏற்றுக்கொண்டால், அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். யாராவது என்னை ஏற்றுக்கொண்டால் அவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.

[21] இயேசு இதைச் சொன்னபின்பு, அவர் உள்ளம் கலங்கியவராய், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான்” என்று வெளிப்படையாகச் சொல்கிறேன்.

[22] அவருடைய சீடர்களோ அவர் யாரைக்குறித்துச் சொல்கிறார் என்று புரியாதவர்களாய், குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

[23] இயேசுவின் அன்பிற்குரிய சீடன் உணவுப் பந்தியிலே அவருக்கருகில் நெருங்கி உட்கார்ந்திருந்தான்.

[24] சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டி, இயேசு யாரைக்குறித்துப் பேசுகிறார் என்று அவரிடத்தில் கேட்கும்படி அவனுக்குச் சொன்னான்.

[25] எனவே அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டான்.

[26] அதற்கு இயேசு, “நான் இந்த அப்பத் துண்டை பாத்திரத்தில் தோய்த்து யாருக்குக் கொடுக்கிறேனோ, அவனே” என்றார். பின்பு அந்த அப்பத் துண்டைத் தோய்த்து, சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

[27] யூதாஸ் அந்த அப்பத் துண்டை வாங்கிப் புசித்தான். பிறகு சாத்தான் அவனுக்குள்ளே புகுந்தான். இயேசு அவனிடம், “நீ செய்யப் போகிறதை விரைவாய்ச் செய்” என்றார்.

[28] ஆனால் இயேசு ஏன் இப்படி அவனுக்குச் சொன்னார் என்று சாப்பாட்டுப் பந்தியிலிருந்த ஒருவருக்கும் விளங்கவில்லை.

[29] யூதாஸ் பணத்துக்குப் பொறுப்பாயிருந்தபடியால், பண்டிகைக்குத் தேவையானதை வாங்கும்படியோ, அல்லது ஏழைகளுக்கு எதையாவது கொடுக்கும்படியோ இயேசு அவனுக்குச் சொல்கிறார் என்று சிலர் நினைத்தார்கள்.

[30] அப்பத்தை வாங்கிக்கொண்டதும் யூதாஸ் புறப்பட்டுப் போனான். அப்பொழுது இரவு நேரமாயிருந்தது.

[31] யூதாஸ் போனபின்பு இயேசு அவர்களிடம், “இப்பொழுது மானிடமகனாகிய நான் மகிமைப்படுகிறேன்; இறைவனும் என்னில் மகிமைப்படுகிறார்.

[32] இறைவன் என்னில் மகிமைப்பட்டால், மானிடமகனாகிய என்னை இறைவனும் தம்மிலே மகிமைப்படுத்துவார்; சீக்கிரமாய் என்னை மகிமைப்படுத்துவார்.

[33] “பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாது; இதை நான் யூதத்தலைவர்களுக்குச் சொன்னேன். இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.”

[34] நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன்: “ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும்.

[35] நீங்கள் இப்படி ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்” என்றார்.

[36] அப்பொழுது சீமோன் பேதுரு அவரிடம், “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டான். இயேசு அதற்கு மறுமொழியாக, “நான் போகிற இடத்துக்கு என்னைப் பின்தொடர்ந்துவர உன்னால் இப்போது முடியாது. பிறகு என்னைப் பின்தொடர்வாய்” என்றார்.

[37] அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, ஏன் என்னால் இப்போது வரமுடியாது? நான் உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றான்.

[38] அதற்கு இயேசு, “உண்மையிலேயே நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ? மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார்.

யோவான் எழுதின நற்செய்தி — Chapters