Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:16

[1] அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயா அவனிடம் போய், “யெகோவா கூறுவது இதுவே: நீர் சாகப்போகிறீர்; பிழைக்கமாட்டீர். ஆகையால் உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும் என்கிறார்” என்றான்.

[2] எசேக்கியா தன் முகத்தை சுவரின் பக்கமாகத் திருப்பி யெகோவாவிடம் மன்றாடினான்.

[3] அவன், “யெகோவாவே, நான் உமக்குமுன் உண்மையுள்ளவனாய் நடந்து, பயபக்தியாய் முழுமனதுடன் உமது பார்வையில் நலமானதையே செய்தேன் என்பதை நினைவுகூரும்” என்று எசேக்கியா மனங்கசந்து அழுதான்.

[4] அப்பொழுது யெகோவாவின் வார்த்தை ஏசாயாவுக்கு வந்தது.

[5] “நீ எசேக்கியாவிடம் போய் சொல்லவேண்டியதாவது: ‘உன் தகப்பனாகிய தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, நான் உனது வேண்டுதலைக் கேட்டேன்; உன் கண்ணீரையும் கண்டேன். உன் வாழ்நாட்களோடு இன்னும் பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன்.

[6] அசீரிய அரசனின் கையிலிருந்து உன்னையும், இந்தப் பட்டணத்தையும் விடுவிப்பேன். இந்தப் பட்டணத்துக்கு ஆதரவாக இருப்பேன்.

[7] “ ‘யெகோவா தான் வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்பதற்கு யெகோவா உனக்குத் தரும் அடையாளம் இதுவே:

[8] ஆகாஸின் நேரம்பார்க்கும் படிவரிசையில் சூரியனின் நிழலைப் பத்துப்படி பின்னடையச் செய்வேன்’ என்றார்.” அப்படியே சூரிய ஒளியும் பத்துப்படி பின்னடைந்தது.

[9] யூதாவின் அரசன் எசேக்கியா நோயுற்றுக் குணமடைந்ததும் பின்வரும் கவிதையை எழுதினான்:

[10] “நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில் மரண வாசலுக்குப் போகவேண்டுமோ? எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?”

[11] “வாழ்வோரின் நாட்டில் நான் மீண்டும் யெகோவாவை காண்பதில்லை. மனிதகுலத்தை இனியொருபோதும் பார்ப்பதில்லை, அல்லது இவ்வுலகில் வாழ்வோருடன் இருப்பதில்லை.

[12] மேய்ப்பனின் கூடாரத்தைப்போல என் வீடு என்னிடமிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறது. நெசவாளனைப்போல என் வாழ்வை நான் சுருட்டி விட்டேன், அவரும் என்னைத் தறியிலிருந்து வெட்டிவிட்டார்; காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்.

[13] நான் விடியும்வரை பொறுமையாய்க் காத்திருந்தேன்; ஆனால் என் எலும்புகளையெல்லாம் சிங்கத்தைப்போல் நொறுக்கி விட்டார்; காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்.

[14] நான் சிட்டுக்குருவியைப் போலவும் நாரைப் போலவும் கூவினேன், துயரப்படும் புறாவைப்போல் விம்முகிறேன். உதவிவேண்டி நான் வானங்களை நோக்கியபோது, என் கண்கள் பெலவீனமாயின. யெகோவாவே, நான் ஒடுக்கப்படுகிறேன், எனக்கு உதவிசெய்ய வாரும்” என்று சொன்னேன்.

[15] ஆனால் என்னால் என்ன சொல்லமுடியும்? அவர் என்னிடம் பேசினார்; அவரே இதைச் செய்திருக்கிறார். என் ஆத்தும துயரத்தின் நிமித்தம் நான் எனது காலமெல்லாம் தாழ்மையாய் நடப்பேன்.

[16] யெகோவாவே, மனிதர் இவைகளாலேயே வாழ்கிறார்கள்; எனது ஆவியும் இவற்றிலே வாழ்வைக் காண்கிறது. நீரே என்னை சுகப்படுத்தி வாழச் செய்தீர்.

[17] நிச்சயமாக, என் நன்மைக்காகவே இப்படியான வேதனையை நான் அனுபவித்தேன். உமது அன்பினால்தான் நான் அழிவின் குழிக்குள் போகாதபடி நீர் என்னை வைத்திருக்கிறீர். என் பாவங்களையெல்லாம் உமது முதுகிற்குப் பின்னாலே போட்டுவிட்டீர்.

[18] பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உமக்குத் துதிபாடாது; குழியில் இறங்குவோர் உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது.

[19] இன்று நான் உம்மைத் துதிப்பதுபோல, வாழ்பவர்கள், வாழ்பவர்களே உம்மைத் துதிப்பார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு உமது உண்மையைப் பற்றிச் சொல்கிறார்கள்.

[20] யெகோவா என்னை இரட்சிப்பார்; நாம் நம் வாழ்நாள் எல்லாம் யெகோவாவினுடைய ஆலயத்தில் இசைக்கருவிகளுடன் துதிபாடுவோம்.

[21] ஏற்கெனவே ஏசாயா நோயுற்றிருந்த எசேக்கியாவுக்கு, “அத்திப்பழ அடையொன்றைத் தயாரித்து, அதைக் கட்டியின்மீது பற்றுப்போடுங்கள்; அப்பொழுது அவர் சுகமடைவார்” என சொல்லியிருந்தான்.

[22] அப்பொழுது எசேக்கியா, “நான் யெகோவாவின் ஆலயத்திற்குப் போவேன் என்பதற்கு அடையாளம் என்ன?” என்று கேட்டிருந்தான்.

இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகம் — Chapters