Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:51

[1] இறைவாக்கினன் ஆபகூக், பாடிய மன்றாட்டு.

[2] யெகோவாவே, உம்முடைய புகழைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், யெகோவாவே, நீர் நடப்பித்த உம்முடைய செயல்களின் நிமித்தம் நான் வியப்படைந்து நிற்கிறேன். எங்கள் நாட்களிலும் அவற்றைப் புதுப்பியும், எங்கள் காலத்திலும் அவற்றை அனைவரும் அறியும்படி செய்யும்; உமது கோபத்திலும், எங்களுக்கு இரக்கத்தை நினைத்தருளும்.

[3] இறைவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் வந்தார். அவரது மகிமை, வானங்களை மூடியது; அவரது துதி, பூமியை நிரப்பியது.

[4] அவரின் மாட்சிமை சூரிய உதயத்தைப்போல் இருந்தது; அவரது கையிலிருந்து ஒளிக்கதிர்கள் சுடர் வீசின, அங்கே அவரது மகத்துவ வல்லமை மறைந்திருந்தது.

[5] கொள்ளைநோய் அவருக்கு முன்பாகச் சென்றது; வாதைநோய் அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்தது.

[6] அவர் நின்று பூமியை அளந்தார்; அவருடைய பார்வையைக் கண்டு நாடுகள் நடுங்கின. பூர்வீக மலைகள் நொறுங்கின, என்றுமுள்ள குன்றுகள் வீழ்ந்தன; அவருடைய வழிகளோ நித்தியமானவை.

[7] கூசானின் கூடாரங்கள் துன்பத்திற்குள்ளானதையும், மீதியானியரின் குடியிருப்புகள் துயரத்திற்குள்ளானதையும் நான் கண்டேன்.

[8] யெகோவாவே ஆறுகளின்மேல், கோபங்கொண்டீரோ? நீரோடைகளுக்கெதிராகவும் உமது கடுங்கோபமாக இருந்ததோ? உமது குதிரைகள்மேலும், உமது வெற்றிகொண்ட தேரின்மேலும் நீர் சென்றபோது, கடலுக்கு எதிராய் நீர் விரோதமாயிருந்தீரோ?

[9] நீர் உமது வில்லை உறையிலிருந்து எடுத்து, அநேக அம்புகளை எய்வதற்காகத் தொடுத்தீர். நீர் ஆறுகளைக் கொண்டு பூமியைப் பிளந்தீர்;

[10] மலைகள் உம்மைக் கண்டு துடித்தன. பெருவெள்ளம் அடித்துக் கொண்டோடியது; ஆழம் குமுறியது, அது தன் கைகளை அலைகளுக்கு மேலே உயர்த்தியது.

[11] உமது அம்புகள் பறக்கும் மின்னொளியிலும், உமது ஈட்டிகள் வீசும் வெளிச்சத்திலும், சூரியனும் சந்திரனும் வானங்களில் அசைவற்று நின்றன.

[12] கடுங்கோபத்துடன் பூமியில் நீர் விரைந்து சென்றீர். கோபத்தில் பிற நாட்டு மக்களை மிதித்தீர்.

[13] உமது மக்களை விடுதலை செய்யவும், அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர். நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனை தாக்கினீர். நீர் அவனைத் தலையிலிருந்து கால்வரைக்கும் தண்டித்தீர்.

[14] மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் நிர்கதியானவர்களை விழுங்க வருவதுபோல, அவனுடைய இராணுவவீரர் எங்களைச் சிதறடிக்கும்படி புயலைப்போல் வந்தார்கள். அப்பொழுது நீர் அவனுடைய சொந்த ஈட்டியினாலேயே அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர்.

[15] கடலை உமது குதிரைகளினால் மிதித்து, ஆற்றின் பெருவெள்ளத்தை பொங்கியெழப் பண்ணினீர்.

[16] நான் அந்த சத்தங்களைக் கேட்டபோது என் இருதயம் படபடத்தது. அந்தச் சத்தத்தில் என் உதடு துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் கால்கள் நடுங்கின. எனினும் எங்கள்மேல் படையெடுத்த, நாட்டின்மேல் வரப்போகும் பேரழிவின் நாளுக்காக, நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.

[17] அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும், ஒலிவமரம் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும், ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும், மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும்,

[18] நானோ என் யெகோவாவிடம் மகிழ்ந்திருப்பேன், என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன்.

[19] ஆண்டவராகிய யெகோவாவே என் பெலன்; என் கால்களை அவர் மானின் கால்களைப் போலாக்குகிறார், என்னை உயர்ந்த இடங்களில் நடக்கப் பண்ணுகிறார். எனது கம்பியிசைக் கருவிகளில், இசை இயக்குனருக்காக இசைக்கப்பட்டது.

ஆபகூக் — Chapters