Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:13

[1] யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை தாவீது யெகோவாவுக்குப் பாடினான்.

[2] அவன் சொன்னது: “யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்;

[3] என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, என் கேடயம், என் மீட்பின் கொம்பு. என் அரண், என் அடைக்கலம், நீர் என்னை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்றுகிற என் இரட்சகர்.

[4] “துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன்.

[5] மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன, அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன.

[6] பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன.

[7] “என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன். என் இறைவனை நோக்கிக் கூப்பிட்டேன். அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார். என் அழுகுரல் அவர் செவிகளில் எட்டியது.

[8] பூமி நடுங்கி அதிர்ந்து, வானத்தின் அஸ்திபாரங்கள் அசைந்தன; அவர் கோபமடைந்ததால் அவை நடுங்கின.

[9] அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று; அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது; நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன.

[10] அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்; கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன.

[11] அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்; அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார்.

[12] அவர் இருளைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரமாக்கினார். வானத்தின் இருண்ட மழைமேகங்கள் அவரைச் சுற்றியிருந்தது.

[13] அவரின் சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மின்னலின் தாக்குதல் வீசுண்டன.

[14] யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது.

[15] அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்; மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார்.

[16] யெகோவாவினுடைய நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும் அவரின் கண்டிப்பினாலும் கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன; பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன.

[17] “அவர் என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்; ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார்.

[18] அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் என்னிலும் அதிகம் பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார்.

[19] அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார்.

[20] அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்; அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்.

[21] “யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்; என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார்.

[22] ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை.

[23] அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை.

[24] நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.

[25] யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறு பலனளித்திருக்கிறார்; அவருடைய பார்வையில் நான் குற்றமற்றவனாயிருந்தேன்.

[26] “உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்; உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர்.

[27] தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்; ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர்.

[28] நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்; ஆனால் உம்முடைய கண்கள் பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்தும்.

[29] யெகோவாவே, நீர் என் விளக்கு; யெகோவா என் இருளை வெளிச்சமாக்குகிறார்.

[30] உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்; என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.

[31] “இறைவனுடைய வழி முழு நிறைவானது: யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது; அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.

[32] யெகோவாவைத்தவிர இறைவன் யார்? நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்?

[33] இறைவன் எனக்கு பெலமுள்ள கோட்டையாய் இருந்து, என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.

[34] அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி, உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார்.

[35] யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்; என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும்.

[36] நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர், உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது.

[37] என் கணுக்கால்கள் புரளாதபடி, நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர்.

[38] “நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களை அழித்துப்போட்டேன்; அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை.

[39] அவர்கள் எழுந்திருக்காதபடி நான் அவர்களை முழுவதும் நசுக்கினேன்; அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள்.

[40] யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்; என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர்.

[41] நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்; நான் அவர்களை அழித்தேன்.

[42] அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள், ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை; யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை.

[43] நான் அவர்களை அடித்துப் பூமியின் புழுதியைப்போலாக்கினேன்; நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரியெறிந்தேன்.

[44] “நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்; நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர். நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.

[45] வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்; அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

[46] அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து, தங்கள் அரண்களிலிருந்து நடுக்கத்துடன் வருகிறார்கள்.

[47] “யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக! என் கன்மலையும் இரட்சகருமாகிய இறைவன் உயர்த்தப்படுவாராக!

[48] எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே, நாடுகளை எனக்குக்கீழ் வைக்கிறவர் அவரே.

[49] அவர் என்னை என் பகைவரிடமிருந்து விடுவித்தார். யெகோவாவே நீர் என்னை என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தியிருக்கிறீர். என்னை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்தீர்.

[50] ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன்.

[51] “அவர் தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்; அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும் தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார்.”

சாமுயேலின் இரண்டாம் புத்தகம் — Chapters